திங்கள், டிசம்பர் 31

நாம் எங்கிருந்து வந்தோம்?




நாம் எங்கிருந்து வந்தோம்?
எங்கே போகப்போகிறொம்?
உலகம் 2012ல் அழியும்ன்னு சொன்னார்களே, ஏன் அழியவில்லை?
எப்போ அழியும்?
நம்மைப் போல வேறு கிரஹங்களில் எங்கும் மக்கள் இருக்கிறார்களா?
பறவை பறப்பதைப் பார்த்தல் நமக்கு என்ன தோணும்? ரைட் சகோதர்களுக்கு
என்ன தோணியது?
விமானங்கள் எப்படி பறக்கின்றன? என்ன தத்துவம்?
ராக்கெட் எப்படி ஏவுகிறார்கள்?
ஒண்ணுமில்லெ ஒரு சின்ன விஷயம், ராக்கெட்டில் எப்படி தங்கள் காலைக் கடன்களை கழிக்கிறார்கள்?
இப்படி சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயங்கள் வரை விடை
தெரியணுன்னா, இங்கே போனால் தெரிந்து கொள்ளலாம்.
எங்கேன்னு கேட்பது காதுலெ விழறது.
கொஞ்சம் பொறுங்க!
அதுக்கு முன்னாலே மேலே சொன்னதுக்குக்கெல்லம் என்ன பதில்ன்னு
தெரிஞ்சுப்போம், என்ன நான் சொலறது சரிதானே?
உலகம் 2012ல் அழியும்ன்னு ஏக அமர்க்களம் பண்ணாங்கள்ள! இவங்களைப் போய் கேட்டா என்ன சொல்றாங்க
தெரியுமா?
நாம இருக்கிறது பால் வெளி மண்டலமாம். அத போட்டோ பிடித்து போட்டு இருக்காங்க. படம் பாருங்க!

அத ஒரு ஸ்கேல் நீளன்னு வச்சுப்போம். அதுலெ நாமெ இருக்கற சூரியக் குடும்பத்தை பேனாவால ஒரு புள்ளி
வைங்க. அந்தப் புள்ளிலே, சூரீயன், ஒன்பது கிரஹங்கள் நம்ம இருக்க்ற பூமி உள்பட, நட்சத்திரங்கள், எறிகற்கள்
எல்லாத்தையும் ஒரு புள்ளிலெ அடக்கிடலாமாம்!!! அப்ப்டின்னா அந்தப் புள்ளிலெ நீங்க எங்கே, நான் எங்கே?
அப்ப்டி இந்த மாதிரி பல பால்வெளி மண்டலங்கள் இருக்காம். இவை எல்லாம் உருவாக பல கோடி மில்லியன்
வருஷ்ங்கள் ஆச்சாம். அதே போல் அழியறதுக்கும் பல கோடி வருஷங்கள் ஆகுமாம். அதனாலெ கவலைப்
படாதிங்க, வாழ்க்கையை மகிழ்ச்சியா கொண்டாடுங்க. என்ன சரியா?
அதப் போல, நம்மைப் போல அல்லது நம்மை விட சிறந்தவங்க வேற கிரஹத்துல யாராவது இருக்காங்களான்னு
(அஙக எதாவது அழற தொடர் எதாவது ஒளி பரப்பறாங்களான்னு கேட்காதீங்க) ஆராய்ச்சி பண்ணறதுக்குன்னு ஒரு
விண்கலம் அனுப்பி இருக்காங்களாம். அதப் பத்தி விவரமா இந்த இடத்துலெ காண்பிச்சு இருக்காங்க.
தினம் நாமும் பறவைகள் பறப்பதை பார்க்கிறோம், என்னிகாவது யோசிச்சுறொப்போமா, அதெல்லாம் எப்படி
பறக்குதுன்னு?

ரைட் சகொதரர்கள் வீடு
அதெப்படி சார், ரைட் சகோதரர்களுக்கு மட்டும் நாமும் அப்படி பறக்கணும்ன்னு தோணிச்சு!
ரைட் சகோதரகள் விட்ட முதல் விமானம்

அதுதாங்க தனி மூளைங்கறது! அப்படி தோனினது நல்லதுக்குத் தான். ஆமாங்க, 
அவங்க கஷ்டப்பட்டதாலதான்
நம்ம ஜாலியா விமானத்துலெ பறக்க முடியுது!
அவ்ஙக எவ்வளவு கஷ்டப் பட்டாங்கங்கறதை பார்த்தா நாமல்லாம் ஒண்ணுமே பண்ணலீங்க.
அதப் போய் பார்க்கணும்!!!!

விமானம் பறக்கணும்ன்னா என்னன்ன விஷயம் முக்கியம்ன்னு நன்னா விளக்கி இருக்காங்க. விமானி உக்காந்து ஒட்டற
இடத்தை நாம பாக்கறமாதிரியும், பல பெரிய விமானங்களையும் அப்படியே பறக்கர மாதிரியே தொங்க விட்டு

இருக்காங்க. பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இதுங்க.
விமானத்தைப் போலவே ராக்கெட் எப்படி விடறதுன்னும் விளக்கமா போட்டோக்களோட வச்சு இருக்காங்க.

  sky labன்னு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளே எப்படி இருக்கும்ன்னு பாருங்கன்னு காட்டறாங்க.
முக்கியமான விஷயம் என்னன்னா, விண்வெளில நாம தட்டு, இலையெல்லாம் போட்டுண்டு சாப்பிடற மாதிரி
முடியாதாம். அதெ விட மலஜலம் எப்படிக் கழிப்பாங்கன்னு, ஒண்ணு விடாம யோசிச்சு வச்சுருக்காங்க பாருங்க,

 
விண்வெளியில் எப்படி மலஜலம்  கழிப்பார்கள்

நம்ம வடிவேலு சொல்லற மாத்ரி ரூம் போட்டு யோசிச்சு இருக்காங்க சார்!!
எல்லாத்தையும் விட பூமியை வெவ்வேறு துணைக்கோள்கள் எப்படி போட்டோ எடுத்து நிமிஷத்துக்கு நிமிஷம்
நமக்கு அனுப்பி நாம எப்படி அதுக்குத் தகுந்த மாதிரி நாம வாழ்க்கையை மாத்திக்கணும் என்பதையெல்லாம்
சொல்லாம சொலறாங்க பாருங்க அதையெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்.

இன்னும் நான் சொல்லாம விட்டது நிறையங்க!!!
இன்னைக்கெல்லாம் பாத்துகிட்டே இருக்கலாம். ஒருநாள் போறாதுங்க!!!
அது சரிங்க, இதெல்லாம் இங்கேன்னு கேக்கிறிங்களா?
வாஷிங்ட்ன் ஸ்மித்சோனியன் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய அருங்காட்சியகம் வாஷிங்டன் டீ.சி. அப்படிங்கறது
தான் அவங்களொட முகவரி. ஒரு தடவை போய் பார்த்துட்டு வாங்க.
(smithsonian national air and space museum, washinton D.C.)
அவ்ஙக்ளொட இணைய தள முகவரி http://www.si.edu/


புதன், டிசம்பர் 26

வெங்காயத்தை வச்சு என்ன பண்றது?

சூப்பும் கண்மனிகளாக வெங்காயம்

கண்ணில் நீர் வரவழைக்கும் பொருள்.
கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வைக்கும் மணமகளிடம்,
“என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன், என் பையன் கண்ணில்
நீ வராமல் பார்த்துக் கொள்வது உன் கையில் தான் இருக்கு”,
பையனின் தாயர்ர் சொல்கிறார்.
“கவலைப் படாதீங்க, அவர் வெங்காயம் உறிக்கும் போது மட்டும் கண்ணில் நீர் வருவதை என்னால் தடுக்க என்னால் முடியாது, அம்மா” என்கிறாள் மணமகள்.
இது எல்லா வீடுகளிளும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி.
ஆமாம், வெங்காயத்தை உறிக்கும் போது கண்ணில் நீர் வருவது எதனால்?
வெங்காயத்தை உறிக்கும் போது அதிலிருந்து ஒரு விதமான என்சைம்
வெளிவருகிறது. அவை சல்ஃபனிக் அசிடை உருவாக்கி, வாயுவாக மாறி,
கண்ணின் நீர் திரவத்தை உருவாக்குகிறது. அது எரிச்சலை உண்டாக்குகிறது.
எப்படி எரிச்சல் இல்லாமல் செய்வதுங்கிறிங்களா?
முடியும்.
ஓடற தண்ணீரில் வெங்காயத்தை வைத்துக்கொண்டு உறிச்சிங்கன்னா,
இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். இல்லையா, வெங்காய வேரை கிள்ளாமல் உறிக்கணும். இல்லையா, ரெஃப்ரிஜிரேட்டரில் வெங்காயத்தை சிறிது நேரம் வைத்துவிட்டு பிறகு உறிங்க.
உறிக்கற போது ஃபேனை ஒடவிட்டு, அந்த வாயு கண்ணிலெ படாம
செய்யுங்க, அல்லது கண்ணாடி போட்டுண்டு உறிங்க.

ஆண்களுக்கு ஒரு நல்ல செய்தி!!!
நியூசிலாந்து விஞ்ஞானிகள் நமக்காக ‘கண்ணிலெ நீர் வராத” வெங்காயத்தை உருவாக்கி இருக்காங்களாம்.
ரொம்ப முக்கியமான விஷ்யம் என்னனா, வெங்காய உற்பத்திலெ சீனாவுக்கு
அடுத்து நாம உலகத்திலெ ரெண்டாவது இடத்துலெ இருக்கோம்!!!
அது சரி, வெங்காயத்தை வச்சுட்டு நாம என்ன பண்ணறது?
வெங்காயம் இன்னைக்கு சமையலுக்குப் பயன்படுத்தலேன்னா, பல வீடுகளில் சண்டை வருது தெரியுமா?
வெங்காயத்தை தக்காளியுடன் வதக்கி சட்னி பண்ணலாம். வெங்காயத்தை மெல்லிசா சீவி கடலைமாவுடன் சேர்த்து எண்ணையில் பொறித்து பஜ்ஜி பண்ணலாம்.
எத்தனை ரோடு கடையில் வெங்காய பக்கோடாவுக்கு வரிசை நிக்குது தெரியுமா?
என்ன வேணாலும் பண்ணலாம்!!
ஐயா, வெங்காயம் எங்கள் உயிருடன் கலந்த உறவு அய்யா!!!
அதனால் தான் வெங்காயத்தை அலங்கரித்து பல வடிவங்கள்ள ஒரு சிலர்  பண்ணி இருக்கிறார்கள். இதுக்காக போட்டி எல்லாம் நடக்குதுங்க!
பாருங்களேன், எப்படியெல்லாம் வெங்காயத்தை அலங்காரம் செய்ய முடியும்ன்னு காண்பித்து இருக்கிறார்கள்.



வெங்காய கடிகார்ம்

அணிலாக

சிலந்திகளாக

பெண்கள் பரேட்

செஃப்

ஊர்வனவாக

ராஜா ராணிகள்

எலிகளாக

புதன், நவம்பர் 7

எலக்‌க்ஷன் நடததராங்களாம்,எலக்க்ஷன்!!!!!



”தலையைச் சுற்றுதப்பா, இவங்களோட தொல்லை, எங்கப்பா நம்ம செசகரட்டரி?” 
வெள்ளை மாளிகையின் அறையில் இருந்து வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டே
ஒபாமா தன்னுடைய செகரட்டரியை சத்தம் போட்டு கூப்பிட்டார்.
அவருடைய மனைவி, இவருடைய சத்தத்தை பார்த்து,
“எதுக்காக இந்த சத்தம் போடூறீங்க, இதுவரை இப்படி உங்களைப் பார்த்ததில்லையே?”
“பின்ன என்ன, நம்ம ஊர்ல எலக்ஷ்ன் நடக்குது, அத பாக்க வாங்கன்னு போனவாரம் இந்தியாவில் உள்ள  முக்கியமான அரசியல் தலைவர்களை கூப்பிட்டிருந்தேன்.”
“அது சரிதானே, அதுக்கு ஏன் இவ்வளவு சத்தம்?”.
“இந்தியப் பிரதமர் அவங்க மாநிலத் தலைவர்களிடம் சொல்லி இருப்பார் போல, அவங்க உடனே தங்கள் முக்கியமான தொண்டர்களை அனுப்பி இருந்தாங்க, சரி இருக்கட்டும்ன்னு பார்த்தா, நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போலத் தோணித்து, அதனாலெ தான் நம்ம செகரட்டரியைக் கூப்பிட்டேன், உடனே அவங்களை இந்தியாவுக்கு பேக் பண்ணி அனுப்பச் சொல்லலாம்ன்னு. அவஙகளோட இருந்த பழக்க தோஷம், கத்தித் தொலைச்சுட்டேன், சாரி   டியர், என்னை மன்னிச்சுடு”.
’உலகத்திலேயே பெரிய வல்லரசு நாடுன்னு உங்களச் சொல்லற போது, உஙகளையே ஒரு சிலர் வழி பண்ணிட்டாங்கன்னு சொல்றீங்க, அப்படி என்ன தாங்க நடந்தது, எனக்கும் சொல்லுங்களேன்.”
அழ மாட்டாக் குறையா ஒபாமா மனைவி.
”போன வாரத்தில் இருந்து நடந்தது இதுதான்”, பிளாஷ் பேக்கை விவரிக்கிறார் ஒபாமா.

 ஒபாமாவின் செகரட்டரி, “மிஸ்டர் ப்ரசிடெண்ட், இந்தியாவில் இருந்து நாம கூப்பிட்டு இருந்த
பத்து பேர் வந்து இருக்கிறார்கள், அவர்களை என்ன செய்வது?”
’ஐந்து பேரை நம்மோட போட்டியிடும் மிஸ்டர் ரோம்னியிடம் அனுப்பிவிடுங்கள், அவரிடம் முன்னதாகவே
சொல்லி இருந்தேன். மீதி ஐந்து பேரை நாம் எஙகெல்லாம் பிரசாரத்துக்குப் போவொமோ அங்கெல்லாம் அவரகளையும் அழைத்துச் செல்வோம்.” ஒபாமா தன் செகரட்டரியிடம் சொன்னார்.
“யெஸ் பிரசிடெண்ட்”.
மறுநாள் காலையில்,
“டேய் மாணிக்கம், எலக்‌ஷ்ன் இங்கெல்லாம் ஒருவாரம் நடக்குமாம், நமக்கு நல்ல வேட்டைதான்”.
“என்னடா கண்ணாயிரம் சொல்றே?”
“ஆமாண்டா, நம்மூர்ல செய்வொமே, ஒரு ஊர்லே லாரியிலே நம்மாட்க் களை ஏற்றி, கள்ள வோட்டு போடச் சொல்லிட்டு அவங்களை மற்றொறு ஊருக்குக் கொண்டு போய் ஒட்டுப் போடவைப்போமே, அது போல இஙக
ஒருவாரம் எலக்‌ஷன் நடப்பது ந்ல்லது தான். நம்ம தலைவர் ஒபாமாவிடம் சொல்லி ஆடகளை ரெடி பண்ணச் சொல்லிடுவோம். என்ன நான் சொல்றது சரிதானே மாணிக்கம்?”
”ஆங், சரியாச் சொன்ன கண்ணாயிரம். தலைவர் வர்ராரு, சொல்லிருவோம்”
"என்ன மிஸ்டர் மாணிக்கம், என்ன வேணும்?”
“கள்ள வோட்டு போடறதைப் பற்றி உங்ககிட்ட பேசலாம்ன்னு.......”
“அப்ப்டீன்னா?”
“இங்க ஒருவாரம் எலக்‌ஷன் நடக்குதில்ல, அத நமக்குச் சாதகமா மாத்திக்க கள்ள வோட்டு போட ஏற்பாடு செய்யலாம்ன்னு உங்க கிட்ட பேசலாம்ன்னு....”,விளக்கினான் மாணிக்கம்.
“சாரி, அந்தமாதிரி எல்லாம் இங்க செய்யமுடியாது”.
“பின்ன எதுக்கு ஒரு வாரம் எலக்‌ஷன் நடக்குது”.
“சில இடங்கள்ள குளிர் அதிகமாக இருக்கும்,வேலைக்குப் போகிறவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப எப்ப வேணும்ன்னாலும் வோட்டு போடட்டும்ன்னு தான் அப்படி ஒரு வசதி. அத இதுக்குப் 
போய் பயன்படுத்தறது சனநாயகத்தை குழி தோண்டறமாதிரி இல்லயா மாணிக்கம்.’
“அட போங்க தலைவா. இப்படி நீங்க இருந்தீங்கன்னா எபபடி ஜெயிப்பீங்க? இதெல்லாம் எங்க ஊர்ல்ல சகஜம் தலைவா”
“நாளைக்கு நியுயார்க்குல நானும் எதிர்கட்சித் தலைவர் ரோம்னியும் ஒரே மேடையிலெ பேசப் போறோம், அதுக்கு நீங்கெல்லாம் வரணும், உங்களோட வந்து இப்ப் ரோம்னியோட இருக்கிறவங்களும்
வராங்க. எப்படி நடக்குதுன்னு பாருங்க”, ஒபாமா மாணிக்கத்திடம்.
“சோடா பாட்டில், அழுகின முட்டை இதெல்லாம் தயார் பண்ண கொஞ்சம் பணம் தந்தா நல்லது”, மாணிக்கம்.
“இதெல்லாம் எதுக்கு”, ஒபாமா.
”எதிர்கட்சித் தலைவர் மேல வீசத்தான், அப்பத்தான் நாம  பலமானவங்கன்னு ராம்னியோ,ரோம்னியொ, யாரொ பேரு சொன்னிங்களெ, அவ்ங்களுக்குத் தெரியப் படுத்தத்தான்”.
“நோ,நோ, அப்படி செய்து விடாதீர்கள். ரெண்டு பேரும் நேருக்கு நேர் பேசி எங்க கொள்கையை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். அத வச்சு எங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். யாரு நல்லா பேசராங்க, அவ்ங்க கொள்கை என்னன்னு மக்களுக்கு தெரியும்.”
“என்ன அரசியலோ ஒண்ணுமே புரியலை இங்க. எங்க ஊர்லே இப்படியெல்லாம் நேருக்கு நேர் பேசவே மாட்டாங்க, கொள்கை, பாலிசி அப்படியெல்லாம் எங்ககிட்ட கிடையாது.
ஒரே கொள்கை எப்படி சுருட்டுறதுங்கறது , எப்படி மற்றவனைத் திட்டறது மட்டும் தான்.”
“குட் நைட், நாளை காலை பார்ப்போம்”, சொல்லிவிட்டு ஒபாமா படுக்கச் சென்றார்.

மறுநாள் மாலை. 
நியுயார்க்கில் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் எல்லாரும் தயாராக இருக்க,
மேடையில் ஒபாமாவும், ரோம்னியும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.
மெதுவாக, சத்தம் யாருக்கும் கேட்காமல்,
”ஹலோ ரோம்னி, எப்படி இருக்கீங்க?” ஒபாமா.
“ஹலோ மிஸ்டர் பிரசிடண்ட், அத ஏன் கேட்கிறிங்க, பெரும் தொல்லைங்க”, ரோம்னி ஒபாமாவிடம்.
“என்ன மிஸ்டர் ரோம்னி, என்ன பிரச்சினை?’.
”எல்லாம் நீங்க அனுப்பின ஆட்களால் தான்’, ரோம்னி.
“அப்படி என்ன பண்ணாங்க அவர்கள்”.
“இந்த மாதிரி நாம ரெண்டு பேரும் பேசப் போறோம், நீங்க வாங்க்ன்னு கூப்பிட்டா,”
“கூப்பிட்டா, என்னாச்சு,”
“பத்து டிரக்கு நிறைய ஆட்கள் கூப்பிட்டுகொண்டு வரணும், பணம் கொடுங்கன்னு ஒரே தொந்தரவாப் போச்சு. அது மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய பேரெல்லாம் வரமாட்டாங்க,
மொத்தமே 200 பேரதான் இருப்பாங்க, எப்படி நடக்குதுன்னு பாருங்க, உங்க ஊர்லெயும் இதெ மாதிரி செஞ்சா அரசியல் நன்னா இருக்கும் அப்படின்னு சொல்லி கூட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆச்சு”.
“இதுமட்டுமா, பணம் கொடுங்க, குடம், குத்துவிளக்கு, ஓட்டுப் போட பணம் கொடுக்கணும் அப்படி இப்படின்னு ஒரே தொந்தரவாப் போச்சு. நம்ம ரெண்டு பேர் பெயரையும் கெடுத்து விடுவாங்கன்னு நினைக்கிறேன், முதல்ல இவஙகளை பேக் பண்ணி இந்தியாவுக்கு
அனுப்ப வழியைப் பாருங்க, அப்புறமா எலக்‌ஷ்னை வச்சுப்போம்”.


போன வாரம் பூரா நடந்ததை பிளாஷ் பேக்காக தன் மனைவியிடம் புலம்பி ஒரு பெருமூச்சு விட்டார் ஒபாமா.
”சரியாத்தான் சொன்னார், ரோம்னி, முதல்ல இவங்களை பேக் பண்ணி அனுப்புற வழியைப் பாருங்க,’ 
ஒபாமா மனைவி.
வெள்ளை மாளிகையின் ஒரு அறையில், மாணிக்கம் தன் நண்பர்களிடம்,
“நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, என்னய்யா எலக்‌ஷன் நடத்தறாங்க, ஒரு கல் வீச்சு கிடையாது, ஒரு பஸ்ஸை கொளுத்த விடமாட்டேங்கறாங்க, வோட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேங்கறாங்க, கொடிக் கம்பம், தோரணம் கிடையாது, நாம எப்ப சம்பாதிப்பது,ஹூஹும், நமக்கு சரிப்பட்டு வராது, நாம் கிளம்ப வேண்டியது தான், பேக் பண்ணுங்கய்யா, என்னய்யா எலக்‌ஷன் நடத்தறாங்க”
இதெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த ஒபாமா, கோபமாக,
“செகரட்டரி, இவஙகளொட விசாவை எல்லாம் கேன்சல் செய்யுங்க் முதலில், இவஙகளை பிளேன்லெ ஏத்தி அவங்க நாட்டுக்கு அனுப்புங்க அப்பத்தான் நம்ம நாடு பொழைக்கும்”.

ஞாயிறு, நவம்பர் 4

இலையுதிர்காலம்!!!!!



tree with orange colour



அமெரிக்காவில் இலையுதிர்காலமாம் இப்போது!!!
இலையை உதிப்பதற்கு மனசில்லை போலிருக்கு!!!
இருக்கட்டும் மக்களுக்கு உணர்த்துங்கள்!!
எங்களைப் போல நீங்களும் இருங்கள்!!
உதிரும் போது கூட கலர்ஃபுல்லாக!!!!

வெள்ளி, அக்டோபர் 19

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய்?



“ஏம்மா, எனக்கு வேலை கிடைக்காதா?”
“ஏண்டி,அப்படிக் கேட்கிற?”
“ நான் படிச்சு எத்தனை வருஷம் ஆச்சு, இதுவரைக்கும் ஒரு இண்டர்வியு கூட வரலையே அம்மா?”
“அதுக்கு என்னடி பன்றது, நீ முடிக்கிறதுக்கும், ரிசசன் வரதுக்கும் சரியா இருக்கு. வெளிநாட்டுள கூட நிறையப் பேருக்கு வேலையில்லாம இருக்கான்னு பேப்பர்லெ போட்டு உள்ளத நீ பாக்கலயா?”
“அதுக்காக இப்படியா, நான் எத்தனை மார்க் வாங்கியும் ஒரு பிரயோசனமும் இருக்காது போல இருக்கு.’
“ஆமாண்டி, நீ, மற்றும் உன்னொட நன்பர்கள எல்லாம் நல்ல மார்க் வாங்கியுள்ளதை உங்க கல்லூரி கூட பேப்பரல கூட போட்டிருந்தாங்க இல்ல.”
”என்ன வாங்கி என்ன பிரயோசனம்?”
“அது சரி வேலைக்குப் போறது அவ்வளவு சுலபம்ன்னு நினைக்கிறயா?”
“வேலைக்குப் போறதுலெ என்னம்மா கஷ்டம்?”
“உனக்குத் தெரியுமா நான் பட்ட் கஷ்டம்?”
’அப்படிச் சொல்லாதே, நான் வேலைக்குப் போறது உங்க பாட்டிக்கு, தாத்தாவுக்கு எல்லாம் பிடிக்காது தெரியுமா உனக்கு?’
"ஏம்மா,அப்படி?”
“அந்தக் காலத்தில் பெண்கள் வேலைக்குப் போவது என்பது கெளரவக் குறைவு. எங்கேயாவது வேலைக்குப் போனா வீட்டுல யார் வேலை செய்வது, வீட்டை யார் பாத்துகிறது மாதிரி பல விஷயங்கள்
பாக்கனும்.”
“அப்ப நீ எப்படி வேலைக்குப் போனே?’
“உனக்குத் தெரியுமா, நான் வேலைக்குப் போகும் போது காலையில் அஞ்சு மணிக்கு எழுந்து அப்பாவுக்கு சமையல் செய்துவிட்டு,(அப்பா அப்ப வெளியூரில் வேலை பார்த்துண்டிருந்தார்) வீட்டுலெ எல்லாருக்கும் வேண்டியதை செய்து வைத்து விட்டு, உன்னைப் பள்ளிக்கு 
அனுப்புவதற்கு வேண்டியதை எல்லாம் முடித்து விட்டு, எனக்கு வேண்டியதை (அதாவது மாலை வரை)  எல்லாம் எடுத்துக் கொண்டு நான் செல்ல வேண்டும் தெரியுமா?”
“இது மட்டுமா, நீ சாயங்காலம் ஸ்கூல் முடித்து பஸ்ஸில் வந்துட்டியான்னு பாக்கணும், ஒரு நாள் லேட்டானாலும் மனசு பக் பக்குன்னு அடிச்சுக்கும். இது மட்டுமா, வேலைக்குப் போற இடத்துலெ
இந்த செமச்டெருக்குள்ள இத்தனை போர்ஷன் முடிக்கணும்ன்னு இருக்கு, (அம்மா கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இருந்தார்கள்), மாணவர்களுக்கு ஒழுங்காகப் பாடம் நடத்தணும், கல்லூரி முதல்வர்
முகம் கோணாம நடந்துக்கணும், இதுக்கு மேலே நான் சேர்ந்து உள்ள மேனேஜ்மெண்ட்டுக்கு என்னைப் ப்ற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணனும், இப்படி பலதையும் பார்த்துப் பார்த்து வேலை செய்வது என்பது அவ்வளவு சுலபம்ன்னா நினைக்கிறே?”
இப்படி அம்மாவுடன் வேலைக்குப் போவதைப் பற்றி இருபது வருடஙகளூக்கு முன்னால் பேசியது நேற்று ஞாபகம் வந்தது.
ஏன்னு கேட்கிறீங்களா?
“வேலைக்கு நான் கிளம்பறேன், ஏன்னா, பையனை எழுப்பி குளிச்சுவிட்டு அவனுக்கு கொஞசம் டிஃபன் கொடுத்து, ஸ்கூல்ல கொண்டு விட்டுவிடுங்கள், என்ன சரியா?”
”என்ன டிஃபன் செய்துருக்கே?’
“அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை,அதையும் கொஞசம் நீங்களே பார்த்துங்க, என்ன சரியா?”
”எனக்கு சாப்பாடு ஏதாவது இருக்கா?”
‘ஏஙக இப்படி கிளம்பற் நேரத்துலே ஒண்ணொண்ணா கேக்கிறீங்க, வேலை கிடைக்குமான்னு எததனை வருஷம் ஏங்கி, இப்பத்தான் கிடைச்சு இருக்கு, அதுக்குத் தகுந்த மாதிரி சரியான  நேரத்துலே ஆபிஸுக்கு போக வேண்டமா, வேலை வேற புதுசு அங்க எப்படி இருக்கோ,
சரி,சரி, பேசறதுக்கெல்லாம் நேரம் கிடையாது, பை கண்ணா, பை.”

”கண்ணைக் கட்டி காட்டுலெ விட்ட மாதிரி இருக்குங்க”, சொல்லிக் கொண்டே மாலையில் வீட்டில் நுழைந்தேன்.
“என்னங்க, இன்னைக்கு நீங்க வேலைக்கு போகலை?”.
”நான் எங்கே போறது, நீ போன பிறகு அவனை எழுப்பி குளிப்பாட்டி, டிஃபன் கொடுத்து, ஸ்கூல் கொண்டு விடறத்துக்குள்ள என்ன பாடு தெரியுமா?, எழுந்துக்கறானா, டிஃப்ன் சாப்பிடறதுக்குள்ளெ
என்ன பாடு படுத்தறான். இவனை வச்சுக் கொண்டு என்ன பாடு படப்போறோமோ தெரியலெ”
இதுக்கே நெரம் சரியாப் போச்சு, இதுலெ நான் சமையல் பண்ணி சாப்பிட்டு விட்டு எப்ப வேலைக்குப் போறது, அதனாலெ இன்னைக்கு போன் பண்ணி லீவு சொல்லிட்டேன்”.
என் கணவர் பையனைப் பற்றி புராணம் வாசிச்சார்.
“அதுசரி, ஆபீஸ் எப்படி இருந்தது?”
“அதை ஏன் கேட்கிறீங்க போங்க, ஒண்ணுமே புரியலெ, இருபது வருஷத்துக்கு முன்னாலே   படிச்சது, அதப் பண்ணிடுங்க, இத பண்ணிடுங்கன்னு எனக்கு மேலே இருப்பவர், அவர் சைனாக்காரரா
ஜ்ப்பானர்ன்னு, பேசறது வேறே புரியாம, சொல்லச் சொல்ல, ஏதோ தலையைத் தலையை ஆட்டி விட்டு வந்துட்டேன். நாளைக்கு என்ன பண்ணப்போறேன்னு தெரியல’
”ஏங்க, ஒரு நாளைக்கே இப்படி இருக்கே,அதுக்கு நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
“இப்படி ரெண்டு பேரும் வேலைக்குப் போனா, பையனைப் பார்த்து, அவனுக்கு வேண்டியதைச் செய்து  கொடுப்பது ரொம்பக் கஷ்டம், அதனாலெ அம்மாவையும் அப்பாவையும் துணைக்கு வரச் சொல்வோமா?
”உனக்கு ஏதாவது புரிஞ்சு பேசறயா, இல்லையா?”
“ஏங்க?”
“பின்ன என்ன உங்க அம்மாவும் தானே வேலைக்குப் போறங்க, அவங்க எப்படி வருவாங்க?”
” வேற என்னங்க பண்ணறது?”
“ஒவ்வொரு நாளும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை பார்க்கும் போது
”நான் ஒண்ணு சொல்றேன், கேட்கிறயா?”
“சொல்லுங்க”
“கொஞ்ச நாளைக்குப் பையனை சைல்ட் கேர்ல விடுவோம்,அதுக்கு நடுவிலே உங்க அப்பாவை
கொஞ்ச நாளைக்கு வரவழைப்போம்,அப்பறமா பார்ப்போம், என்ன நான் சொல்றது சரியா?”
“பாப்போம்”
மறுநாள் காலையில் எழுந்ததும்,
”என்னங்க, பையனுக்கு காய்ச்சல் மாதிரி இருக்கு, டாக்டரிடம் போவோமா?”
“டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி காமிச்சபிறகு எப்ப நான் வேலைக்குப் போவது, பேசாம லீவு போட்டு விடவா?”
“அதச் செய்.”
மறுநாள்,
“என்னங்க திடீரென்னு வராம இருந்திட்டீங்க,”மேலதிகாரி கோபமா கேட்டார்.
“வேலைக்குச் சேர்ந்து ரெண்டு நாள் ஆகலை, அதுக்குள்ள லீவு போட்டா எப்படிங்க?”
“சாரி சார், பையனுக்கு ஜுரம், டாக்டரிடம் போனேன்,அதான் வரமுடியல, இனிமேலே இப்படி நடக்காம பார்த்துகிறேன்.”
இப்படியே தினம் ஏதாவது பிரச்சனை.
இரண்டு நாள் ஆகலை.
“எழுந்திருடா கண்ணா, ஸ்கூலுக்கு போகனும்.”
“முடியாது, நான் போகமாட்டேன்”.
“அடம் பிடிக்காதடா,அம்மா ஆபிஸ் போகணும்.”
“எனக்குப் பிடிக்கலை, நான் போகமாட்டேன்.”
இவ்வளவு சின்னப் பையனுக்கு பிடிவாதமா, கோபம் வந்தது. பளார்ன்னு ஒரு அடி. தாங்கமாட்டாமல் கீழே விழ, ஒரே அழுகை.
”அவன் இன்னைக்குப் போகமாட்டான், சரிதான் இன்னைக்கும் லீவு தான்,
இப்படியே போனால், சரிப்பட்டு வராதுங்க, அதிகாரிகிட்ட என்னால வசவு வாங்க முடியாதுங்க”.
”வேற என்ன செய்யப்போறாய்”, என் கணவர்.
”எப்படித்தான் என் அம்மா அத்தனை பெரிய குடும்பத்தில், எல்லாரையும் அனுசரித்துக் கொண்டு, வேலைக்கும் போனார்களோ, என்னாலெ ஒரு குழந்தையை வைத்துகொண்டு நிறையப் படித்து விட்டு வேலைக்கு போகணும்கிற, என்னுடைய ஆசை நிராசை ஆகிவிடுமோ தெரியலயே? எதுக்கும் அம்மாவை ஆலோசனை கேட்போம்ன்னு, அம்மாவுக்கு போன் பண்ணேன்.
“அம்மா, எப்படி உன்னால மட்டும் முடிந்தது?”
“இதுக்குத்தானே இத்தனை நாளும் ஆசைப் பட்டாய், கவலைப் படாதே, உன் ஆசை நிராசை ஆக்க நான் விடமாட்டேன்.’
“எப்படிம்மா முடியும்.”
“ஒருவாரம் பொறுத்துக் கொள், நான் ஏதாவது செய்கிறேன்.வேற ஒண்ணும் இல்லையே, வச்சுடவா?’
போனை வைத்து விட்டார்கள்.

“என்னம்மா, திடீர்ன்னு வந்து இருக்கே”, காலையில் வாசல் கதவைத் திறந்தால் அம்மா. 
“உள்ளே வந்து சொல்றேன்”.
“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லையே”, நான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே, நீ தானே சொன்னாய், உன்னுடைய ஆசை நிராசை ஆகிவிடுமோ, கவலையா இருக்குன்னு”.
“அதனாலெ, என்ன சொல்றே நீ”.
“வேலைக்குப் போகணும்ன்னு ஆசைப்பட்டெ நீ, அதுக்கு என்னாலெ ஏதாவது செய்யணுன்னு யோசித்தேன், நானோ வயசானவள், எனக்கு 60 வயசு ஆகப்போறது, எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு வருஷத்திலோ அல்லது ரெண்டு வருஷத்திலோ வீட்டுக்குப் போகச் சொல்லுவாங்க. அதனாலெ  பார்த்தேன், நானே கல்லூரியில் சொன்னேன் விஷயத்தை எல்லாம், அவஙகளும் சரின்னு ஒத்திகிட்டாங்க.”
“என்னம்மா சொல்றே, என்ன சொன்னெ, என்ன ஒத்திகிட்டாங்க?”
“என் பேரனை என்னை விட்டா யாரு பார்த்துப் பாங்க,அதனாலெ....”
“என்னம்மா சஸ்பென்ஸ் வைக்கிறே?, சட்டுன்னு சொல்லும்மா.”
“ஒண்ணுமில்ல, நான் என்னுடைய வேலையில் இருந்து முன்னாலேயே விலகிக்கிறேன்னு ஒரு கடிதம் கொடுத்துவிட்டு வந்துட்டேன், அவங்களும் சரின்னு சொல்லி, டாடா காமிச்சுட்டாங்க”.
“என்ன, வேலையை ரிசைன் பண்ணிட்டியா?’
“ஆமாண்டி,பொண்ணு தானே முக்கியம், அவங்க குடும்பம் தானே நம்ம குடும்பம்,அவங்க நல்லா மனசார கவலை இல்லாம இருந்தாத்தானே நாம மகிழ்ச்சியாக இருக்கமுடியும்,  அதனாலெ தான் இந்த முடிவு. என்ன உனக்கு திருப்தி தானே. இனிமே கவலை இல்லாம
வேலைக்கு போ”

 ”ரொம்பத் தேங்ஸ் அம்மா, நீ பண்ண இந்த விஷயத்தை என் ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன்.’
“அம்மா, அம்மாதான், இதுக்குத்தான் ஆசைப்பட்டாயா, என்று கேட்டாயே,ஆமாம்மா, இதுக்குத் 
தான் ஆசைப்பட்டேன்.’



புதன், அக்டோபர் 17

லாரே குகை (luray caverns)


பெரியாழ்வார் பாசுரம்.
       " சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
 அத்திரமே கொண்டெறிய அனைத்துலகம் திரிந்தோடி
         வித்தகனே இராமாவோ நின் அபயம் என்றழைப்ப
 அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஒரடையாளம்.'
                    பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில், ராமனும், சீதையும்,தம்பி இலக்குவனொடு சித்திரக்கூடத்தில் இருக்கின்ற போது, அந்த சமயத்தில் காக்கை வடிவத்தை எடுத்துக் கொண்டு ஒரு அசுரன், சீதையின்
முலையைத் தீண்ட வரும்போது, அந்த சமயத்தில் பல இடங்களும் ராமன் விட்ட பாணத்தைத் தாங்க மாட்டாத காக்கை சீதையின் காலடியில் வந்து ”அபயம்”,”காப்பாற்று”, என்று விழுந்ததைப்  பற்றி கூறுகிறார்.
குப்த கோதாவரி

அந்த சித்திரக்கூடம் இந்தியாவின் மத்யபிரதேஷ் மற்றும் உத்திரப்பிரதேசம் மானிலஙளுக்கு இடையே உள்ளது. என்ன விஷேஷம்ன்னா, மந்தாகினி ஆறு அங்கு ஒடுகிறது. அங்கு தான் பரதன் இராமனின் பாதரக்‌ஷைகளைப் பெற்றுக் கொண்டு அயோத்திக்குச் சென்றான். அந்த சித்திரக்கூட்த்தில் இராமன், லக்குவணன் மற்றும் சீதை
ஆகியோர் ஒரு குகையில் மிக அதிக நாட்கள் (11 வருஷங்கள்) தங்கி இருந்தார்கள்.  அந்த இடத்திற்கு குப்த கோதாவரி என்று பெயர். மிகப் பெரிய குகை. மிக நன்றாக உள்ளது. விளக்குகள் போட்டு நன்றாக வைத்துள்ளார்கள்.
எதற்காக இதை பற்றிச் சொல்கிறேன் என்றால், அதற்கு சமமாக இந்தியாவில் வேறு எங்கும்  குகையில் மனிதர்கள் வசித்ததாக சரித்திரம் இல்லை.
அதைப்போலவே அமெரிக்காவில் வாஷிங்டன் அருகில், லாறே (luray caverns) குகை உள்ளது.


எவ்வவவு பெரிய அறை பாருங்கள்


அது 4000000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாகச் சொல்கிறார்கள். இயற்கை அற்புதம் என்றே சொல்லலாம்.
ஏற்கனவே முன்னால் சொன்ன குப்த கோதாவரி குகையைப் போல பல மடங்கு பெரியது. அமெரிக்காவின் அற்புதம் என்றே சொல்லலாம்.
அதைப் பார்க்க நாள்தோறூம் மக்கள் வந்த வ்ண்ணம் இருக்கிறார்கள். ஒரு சர்ச் உயரத்திற்கு மாளிகை போன்ற, தரைக்கு அடியில் 4000 அடி ஆழத்தில்,10 மாடிக் கட்டிடத்திற்கு உயரம் கொண்ட, இயற்கையாக உருவான மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான கால்சியம் படிகங்கள், இன்றைக்கெல்லாம், பார்த்துக்
கொண்டிருக்கும் வ கையில், தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனைப் பார்க்க ஒரு மணி நேரம் ஆகும்.அதனை நன்கு ரசிக்க எதுவாக
பல இடங்களில் விளக்கு அமைத்து இருக்கிறார்கள். கல்யாண மண்டபம் போன்ற ஒரு இடத்தில், குகைக்குள்ளதான், மிகப் பெரிய வாத்ய கருவி வைத்துள்ளார்கள். அமைதியான அந்த இடத்தில்
அதை வாசித்துக் காட்டும்போது என்ன இனிமையாக உல்லது தெரியுமா?
வாத்ய கருவி

வசூலித்த பணம்

wishing well
உள்ளேயே, (wishing well) ஒரு நீர் நிரம்பிய ஒரு இடத்தில், நம் ஊரில் கிணத்தில் காசு போடுவோமே,
அதே போல, இங்கேயும், நிறைய காசு பொடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை எண்ணி அதனை அமெரிக்காவில் உள்ள ஏழை மற்றும் அனாதை இல்லங்களுக்கு அளிக்கிறார்கள்.
அப்படி இதுவரை கொடுத்துள்ள பணம் கோடிக்கணக்கான டாலர்களாம்.
பக்கத்திலேயே வாகங்களின் அணிவகுப்பு ஒன்று உள்ளது. பல வருஷ்ங்களுக்கு முன்னால் உண்டாக்கப்பட்ட வாகனங்களை வைத்துள்ளார்கள். பார்க்க வேண்டிய ஒரு இடம்.
the garden maze

அருகிலேயே தோட்டம் ஒன்று உள்ளது. என்ன விஷேஷம்ன்னா,உள்ளே போனா வெளியே வருவது அவ்வளவு சுலபம் அல்ல். அப்படி குறுக்கு நெடுக்குமாக ஒரு கம்யுட்டர் கேம் போல
உள்ளது. அதன் பரப்பளவு ஒரு ஏக்கராம்.எட்டடி உயரத்துக்கு புல் வளர்த்துள்ளார்கள்.
காலைலே போனா,  எல்லாத்தையும் முடித்து வர மாலை ஆகிவிடும்ன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.
என்ன ஒரு சங்கடம் தெரியுமா?
நிறைய பணம் வசூல் பண்ணூகிறார்கள்.
அமெரிக்கா போகும் பொது, ஒரு தடவை பார்த்துவிட்டு வாருங்கள்
LOCATION: LURAY CAVERNS, NEXT TO SHENANDOAH NATIONAL PARK,

                       VA 22835 U.S.A

திங்கள், செப்டம்பர் 24

பெய்யனப் பெய்யும் மழை

பெய்யனப் பெய்யும் மழை
அந்தக் காலத்தில் வாசுகி அம்மையார், அதாங்க திருவள்ளுவர் மனைவி, சொன்ன சொல் நடக்குமாமே, ராட்டினத்தில் குடத்தைக் கட்டி
கிணத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் பொது, வள்ளுவர் கூட்டார்ன்னு அப்படியே விட்டுட்டு வந்தாங்களாம் ,அவங்க திரும்பி வர வரைக்கும்
குடம் அந்தரத்திலே நின்னுக்கிட்டு இருந்ததாம்.பதிவிரதை சொல் அப்படியாம்.
இப்ப அப்படி யாரும் இருக்காங்களோ என்னவோ தெரியலே,ஆனா அமெரிக்கா வானிலை ஆரராய்ச்சிக் காரங்க சொன்னா பதிவிரதை
கணக்கா நடக்குதுன்னா பாருங்க?
என்னய்யா பிடிகை எல்லாம் பிரமாதமா இருக்குங்கிறிங்களா?
ஆமாங்க, அமெரிக்காவில வாழற தமிழ் மக்கள் எல்லாம் சேர்ந்து தமிழ் வகுப்பு நடத்தறாங்க.நல்லது தான் பண்ணறாங்க.
நான் சென்ற வாரம் என் பெண்ணுக்கு உபகாரம்செயலாம்னு (உபகாராமா இல்லை உபத்திரவமா என்பது அவங்க சொல்லனும்)வாஷிங்டன் பக்கத்துலே உள்ள மேரி லன்ட் வந்தேன். நான் அமேரிக்கா போய் இருக்கேன் என்பதை எப்படி எல்லாருக்கும் தெரிவிக்கிறது! அங்க ஒரு சனிக்கிழமை தமிழ் வகுப்புக்கு போனோம். நான் தமிழ் கத்துக்க இல்லை, என் பேத்திக்குத தான், தமிழ் சொல்லித்தர.சும்மாசொல்லக் கூடாது பொறுப்பாச் சொல்லித் தராங்க.அடுத்த நாள் ஒரு சுற்றுலா எல்லாரும் போற மாதிரி ஏற்பாடு செய்து இருந்தார்கள். மாலை நாலு மணிக்கு என்று முன்னர் திட்டமிட்டு இருந்தார்களாம், ஆனால்,வானிலை ஆராய்ச்சியைப் பார்த்துவிட்டு அந்த நேரத்தில் மழை வரும் என்று சொல்லி உள்ளார்கள், அதனால் நாம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று திட்டத்தை மாற்றினார்கள்.
நான் சொன்னேன்,"மழைவரும் என்று தானே சொல்லி உள்ளார்கள், நம்மூரில் போல வந்தாலும் வரலாம், வராமல்போனாலும் போகும், எதுக்காக நேரத்தை மாற்றனும்"
என் பெண், "அப்படியில்லப்பா, இங்க சொன்னா சொன்ன மாதிரி நடக்கும், அப்படி சரியாச் சொல்லுவாங்கப்பா" என்றாள்.
எனக்கு நம்பிக்கை இல்லை.
மறுநாள் .
"அப்பா என்ன நன்றாக இருந்ததா. சுற்றுலா, கிளம்புவோமா", என்றாள் என் பெண்.
"ஏம்மாஅதுக்குள்ளே" என்றேன் நான்.
மழை வரும் போலே இருக்கு அப்பா".
அதுவரை அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த,நான்,
"என்ன மழை வரப்போகுதா? நிஜமாத்தான் சொல்லறே? மணி நாலு ஆகப்போகிறதா?"
"ஆமாப்பா, மணி நாலு ஆகப் போகுது, மழை வரத்துக்கு முன்னால வீட்டுக்கு .போகலாம்" என்றாள்
அப்பத்தான் நினைத்துக் கொண்டேன், அந்தக் காலத்தில் பதிவிரதைகள் "மழை பெய்' என்று சொன்னால் பெய்யுமாம், அது போல இந்தக் காலத்தல் அமெரிக்கா வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் பதிவிரதைகள் போலும்.
அப்ப நாம் ?

திங்கள், ஜூலை 23

கிளிப் பேச்சுக் கேட்க, வா?


கிளிப் பேச்சுக் கேட்க, வா?
என்னங்க இது தலைப்பு, கிளிப் பேச்சுக் கேட்கவான்னு. நீங்க சொல்றது கேட்குது, என்ன கிளி  ஏதாவது சொல்லுமா, அத நம்ம கேட்கிறதான்னு. அந்த மாதிரி கிளி பேச்சக் கேட்டது எவ்வளவு  பலைனைக் கொடுத்து இருக்குன்னு இந்த கதை முடிவிலே நீங்களே ஒத்துப்பிங்க பாருங்க! 
அது சரி விஷயத்துக்கு வாங்கிறிங்க.
கிளிக்கு அந்தக் காலத்தில் இருந்து முக்கியத்துவம் நிறையக கொடுத்து இருக்காங்க.
இராமானுஜர் கிளி வளர்த்தாராம், அதற்குக் குலசேகரன் என்று பெயர் வைத்தாராம்.
  "இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
    தென்னரங்கம் பாடவல்ல சீர் பெருமாள்
      பொன்னன் சிலை முதலியர்வேள் எங்கள் குலசேகரன் என்றே கூறு"
 அத போல "எல்லே இலங்கிளியே இன்னும் உறங்குதியோ" என்று ஆண்டாளும்
 "சொல்லெடுத்து தங்கிளியே சொல்லே" என்று திருமங்கையாழ்வாரும் கிளியை பற்றி  நிறையப் பேர் பாடியுள்ளார்கள் .
அதென்ன குயில் தானே நன்னாப் பாடும் என்பார்கள், நீ கிளி நன்னாப் பாடுன்னு சொல்றே?
அப்படின்னு சொல்றது கேட்குது
குயில் பாடித்துன்னா இன்று பூரா கேட்டுண்டே இருக்கலாம், ஆனா கிளி பாடினா அப்படி  இல்லை, அதன் குரல் கரகரன்னு, ஏதோ தகரத்திலே கீர்ராப்போலே இருக்கும் இல்லையா? ஆனா கிளி பேசறது நன்னா இருக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு. நாமா என்ன  சொல்லறமோ அத திருப்பிச் சொல்லும்.
அப்படித்தான் கிளி சொன்னது ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி இருக்குன்னாப் பாருங்க.
அதென்ன திருப்பு முனை?
  "காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
   ஸ வாஸுதேவோ ரங்கேசய  பிரத்யட்சம் பரமம் பதம்"
இப்படின்னு சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொல்லிண்டு இருந்தது கிளி.
எங்கே தெரியுமா?
தர்ம வர்மா பரம்பரையில் வந்த கிள்ளிச் (கிளிச்) சோழன் வேட்டைக்கு வந்த

 கிளிச்சோழன்  கிளி சொல்வதை
கேட்டல்
போது  ஒரு மரத்தடியில் படுத்து இருந்த போது, மரத்தில் இருந்த கிளி மேலே சொன்ன  ஸ்லோகத்தை அவன் கேட்கும்படி சொன்னது.
சோழனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை.
என்னவோ கிளி சொல்லுதே கேட்போம்ன்னு யோசித்தான்.
"இதோ இங்கே இருக்கே காவிரி அதுதான் வைகுந்தத்தில் உள்ள விரஜை நதி.
விமாநம் தான் ரங்க மந்திரம், வாசுதேவன் தான் ரங்கநாதனாக இருக்கான்
இது தான் பூலோகத்திலே உள்ள வைகுந்தம்"
இப்படிங்கற மாதிரி அவனுக்குப் புரிந்தது
உடனே அடுத்த பகுதிய கிளி சொல்லித்து,
  "விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
     ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:
"ஓம் என்ற ப்ரணவாகாரத்துக்கு உரியது தான் விமாநம், நான்கு வேதம் தான் மேலே உள்ள  கலசங்கள் உள்ளே ஸ்ரீ ரங்கநாதன், இவற்றை உணர்த்துவதற்காக சயனித்துக் கொண்டு இருக்கிறான்."
கிளிச் சோழனுக்கு ஒண்ணும் புரியலே, எதுக்காக கிளி இதே சொல்லணும், அப்படின்னு  தூங்கிப் போனான். அன்னிக்கு ராத்திரி அவன கனவுலே

கனவில் அரங்கன் தன்னை உணர்த்தும் காட்சி
பெருமான் தான் யார் என்பதை  உணர்த்தினான்.
மறுநாள் முதல் மண் மேடிட்டு இருந்த பகுதிகளை நீக்கினான், விமானம் கொஞ்சம்  கொஞ்சமாக வெளியே தெரிந்தது.
ஆக பெருமான் கிளி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்னாப் பாருங்க?
இப்பச் சொல்லுங்க "கிளிப் பேச்சுக் கேட்க, வா" அப்படிங்கற தலைப்பு சரிதானே?
அதுக்காகத்தான் ஸ்ரீரங்கத்திலே கிளி மண்டபம்ன்னு அந்த இடத்துக்குப் பெயர்.   உடனே கிளம்புங்க .

பாற்கடலில் இருந்து ரங்கவிமானம் 
  
அரங்கன்

வெள்ளி, ஜூலை 6

அஞ்சு குழி, மூணு வாசல்!!

அஞ்சு குழி, மூணு வாசல்!!
அஞ்சு குழி மூணு  வாசல்
அதென்னங்க அஞ்சு குழி மூனு வாசல், அப்பிடிங்கிறிங்களா?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
பல சிறப்புக்களைக் கொண்டதுங்கறது எல்லாருக்கும் தெரியும். ஆயிரங்கால் மண்டபம், அதில் நடக்கும் வைகுந்த ஏகாதசியாகட்டும், பங்குனி உத்திரம் அன்று நடக்கும்  ரங்கநாதர், ரங்கநாயகி சேர்த்தியாகட்டும், கிராமத்து மக்கள் எல்லாரும் ஒன்று கூடி சேர்ந்து கொண்டாடும் சித்திரைத் தேராகட்டும், எல்லாம் உலகப் பிரசித்தி பெற்றவை  இல்லையா?
அது போல கோயில்ல ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதைகளைச் சொல்லும். சொல்லிக் கொண்டே போகலாம். அதிலே அஞ்சு குழி மூணு வாசல்ன்னு ஒரு இடம். அங்க அஞ்சு  குழி இருக்கும். பக்கத்திலேயே மூணு வாசல் இருக்கு. வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் கை விரல்களை அதில் வைத்துப் அங்கிருந்து நேராகப் பார்ப்பார்கள்.
"என்னய்யா பார்க்கரே?"
" ஒண்ணும் தெரியலையே? ஏதோ  நம்ம விரலை இந்த அஞ்சு குழியிலே வச்சுப் பார்க்கச் சொல்றாங்க, எதித்தாப்பலே வாசல் தெரியுதா? அப்படின்னு கேட்கிறாங்க, உம் தெரியுதுன்னு சொல்றதைத் தவிர ஒண்ணும் புரியலே."
"இதப் பார்க்கறப்ப, ஒரு சினிமாவிலே செந்தில், மலைக்கு மேல சாமி எனக்குத் தெரிகிறார், உங்களுக்குத் தெரிகிறாரா? என்று கேட்டுவிட்டு, மேலும் அவரவர் மனைவிகள் பதிவிரதைகள்ன்னா உங்களுக்கும் கடவுள் தெரிவார் என்று சொல்வார். இதைக் கேட்ட எல்லாரும் கடவுள் எங்களுக்கும்
தெரிகிறார் என்று பொய் சொல்வார்கள். அது போலத்தான் வாசல் தெரியுதான்னு கேட்டா வேற  என்ன சொல்றது?"
அந்த சமயம் அங்கு வந்த ஊர் பெரியவர்,
 "அப்படி இல்லங்க, இந்த அஞ்சு குழி, மூணு வாசல் மிகப்  பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டுள்ளது, இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் இது
தெரியும்"
அப்படின்னார்.
நான்,
 "அப்படி என்ன தத்துவங்க, சொல்லுங்க நாங்களும் தெரிந்துக்கறோம்"
என்று  சொல்லி அவரிடம் விளக்கச் சொன்னோம்.
"நீங்க பாத்திருப்பிங்க, அந்த இடத்திலே அஞ்சு குழி இருக்கும், அதுலே நம்ம அஞ்சு விரலையும் விட்டு, எதித்தாப்லே இருக்கும் வைகுந்த வாசலைப் பாக்க வேண்டும். நம்முடைய உடம்புல உள்ள அஞ்சு புலன்களையும் அடக்கினால், அதாவது கண், காது, மூக்கு, வாய், மனம்  இவைகளை அடக்கினால், தத்வம், ரசஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைத் தாண்டினால்  கண்ணனை அடையலாம் என்பது ஒரு விளக்கம்.
மற்றொரு விளக்கமும் உண்டு.
இதில் "அஞ்சு" என்பது ஐம்புலங்களையும் குறிக்கும். "மூன்று" என்பது, 1. அசித்,
அதாவது ஐம்புலன்களால் பெறப்படும் அனுபவம், அதுக்கு பேர் ஐச்வர்ய அனுபவம்,
2. சித் என்றால் ஜீவாத்மா தான் பெரிது என்ற கைவல்ய அனுபவம்,,
3. ஈஸ்வரன் என்கிற பரமாத்மா தான் உயர்ந்தது என்கிற தத்துவம்,
அதாவது ஐம்புலன்களால் பெறப்படும் அனுபவம், 
மற்றும் உடம்பு தான் பெரிசு, பரமாத்மா என்று ஒண்ணும் கிடையாது
போன்றவற்றைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், பரமாத்மா என்கிற உயர்ந்த விஷயம் புலப்படும்
அதாவது குழிக்கு அருகில் உள்ள இரு வாசல்களும் அசித், சித் என்பதை குறிக்கும்.
பக்கத்தில் உள்ள இரு வாசல்களை தவிர்த்து நேராக உள்ள வாசலை பார்த்தால்  வைகுந்த வாசல் தெரியும். இதைத்தான் அஞ்சு குழி மூணு வாசல் சொல்லுது.  
ஆக மொத்தத்தில் அந்த இடம் "அஞ்சும் குழி" ன்னு கூட வைத்துக் கொள்ளலாம்."
"நல்ல விளக்கங்க, நிச்சயமாக மனதில் வைப்போமுங்க,நன்றி"
அது சரி, எங்களை மாதிரி வெளியூரில் உள்ளவர்களுக்கு அந்த இடம் எங்க இருக்குன்னு  சொல்றது கேட்குது.
பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சந்நிதியை நோக்கிப் போகும் போது 
அஞ்சு குழி
மூணு வாசலி்ல் இருந்து பார்த்தால்
தெரியும்
 வைகுந்தம்
தன்வந்திரி சந்நிதிக்கு அருகாமையில் இருக்கு. மறக்காமல் பாருங்கள்.

வெள்ளி, ஜூன் 8

எங்க ஊர்!!!!

எங்க ஊர்!!!! பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை நிலை,
திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் என்று அவதாரங்கள் நிலை,
இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு வரமுடியுமா?
யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?"
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம், "என்ன சினிமா பார்த்தியா?"
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் போகமுடியாத நிலைகள் அவை  என்ன அவதாரங்கள் நடந்த இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், நமக்குள்ளே
உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள்
 "இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" என்று சொல்ல  முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட வைகுந்தத்துக்கு
போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம்,
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே  போற காக்கை மாமிசத்துக்க்கு ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்த்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ ருபத்தில் நிலை.
ஆம், அப்படிப் பெருமை கொண்டவர் தான் எங்கள் ஊர் லக்ஷ்மி நாராயணன் பெருமாள்.



பெருமாள் கோயில்

லக்ஷ்மியை தனது இடப்பக்கத்தில் ஏந்திக் கொண்டு பக்தர்களை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். சிறிய வடிவம் கொண்டவர் தான்  எங்கள் ஊரில் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி நாராயணன்.
ஆனால் கீர்த்தி  அதிகம் கொண்டவர். கேட்டதெல்லாம் அருளுபவர். ஏன் கேட்காமலேயே கூட  கொடுக்கக்கூடியவர் தான். அவரை ஒரு தடவை பார்த்து உங்கள அபிலாஷைகளை சொல்லி விட்டு வாருங்கள், பின்னர் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்று.
அதோட மட்டும் இல்லை, ஆஞ்சநேயருக்கும் கோயில் இருக்கு. பெருமாள் கோயில்  குளத்தின் கரையில் எல்லாருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
 அனுமார் கோவில்

சிவன்கோவில்

சிவன்கோவில்
இதைத் தவிர சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. அதுவும் குளத்தின் தென்கரையில் உள்ளது.
அது சரிய்யா, உங்கள் ஊர் எங்கே இருக்குன்னு கேட்பது, காதுலே விழுது.

ஹிரன்யகசிபுவை கொல்வதற்கு எல்லாரும் கூடிப் பேசினாங்களே,

ராமானுஜர் திருமந்திரத்தை தான் உயிர் போனாலும் பரவாயில்லை, மற்ற எல்லாரும் உய்ய வேண்டி கோபுரத்தின் உச்சியிலே நின்னு "ஓம் நமோ நாராயணாய" என்று சொன்ன,

பெரியாழ்வார் கிருஷ்ணன் இந்த ஊரில் தான் பிறந்தான் என்று எண்ணிக் கொண்டு "வண்ண மாடங்கள் சூழ்" என்று திருப்பல்லாண்டு பாடிய, திருக்கோஷ்டியூர் அருகிலும்,

பிள்ளையாருக்கு உகந்த கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாற்பட்டிக்கு அருகிலும்,

ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளதுதான் எங்கள் ஊர்.

                    " வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆளும் சோலை
              கொண்டால் மீதனவும் சோலை,குயிலினம் கூவும் சோலை"

குயில்களும் மயில்களும் துள்ளி விளையாடும் இடமா? உங்கள் ஊர்?
வண்டுகள் ரீங்காரம்செய்யும் இடமா? கெண்டை மீன் துள்ளி விளையாடும் ஆறுகள் பாயும் இடமா?
அப்படியும் இருக்குமோ, இப்படியும் இருக்குமோ? என்று கற்பனையில் நினைக்காதிர்கள்!!
வறண்ட செம்மண பூமி, மழை பெய்தால் தான் புல் பூண்டுகள் முளைக்கலாமா என்று நினைக்கும் இடம். ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து, வானம் இருண்டால் வாழ உலகினில் பெய்தால்தான் அங்கு உள்ளவர்கள் வாழ்வு மலர முடியும்.
அப்படிப்பட்ட ஊர் தான் எங்க ஊர் நெடுமரம். என்ன மரமெல்லாம் பெரிசா வளந்திருக்குமோ?
அப்படின்னு கேட்கிறிங்களா?
அதெல்லாம் ஓண்னுமில்லைங்க, ஏதோ பேர் வச்சுட்டாங்க நெடுமரம்ன்னு, அவ்வளவுதாங்க.
அப்படிப்பட்ட ஊர்ப்பத்தி சொல்லணும்.
எங்க அப்பாவுக்கு பெரிய சம்பளம்ன்னு என்னும் அப்ப கிடையாது, அதனாலே
மூத்த பிள்ளையான நான் படிக்க!!!! முதல்லே போன பள்ளிக்கூடம், இப்ப எப்படி மாறி இருக்கு பாருங்க. என்ன ஆச்சர்யக்குறி நிறையப் போட்டிருக்குன்னு பார்க்கிறிங்களா?


ஆமா,அந்தப் பள்ளிக்கூடத்திலேயே முழுசா ஒரு வருஷம் படிச்சிருப்பேனான்னு எங்க அம்மாவைக் கேட்டாத்தான் தெரியும்.
அந்த பள்ளிக்கூட மாணவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லித் தருகிறார்கள் என்பதை அந்த விளம்பரத்தைப் பார்த்தாலே தெரியும்.
மாணவர்கள் முன்னேறி விடுவார்கள் இல்லையா? இதிலென்ன சந்தேகம்!!!





அந்த ஊர் மக்களுக்கு, ஏன் ஜாதி பேதம் இன்றி, எல்லாருக்கும் குடிக்கத் தேவையானத்  தண்ணீரைத் தரும் குளம், அந்த அம்மன் கோயில் குளம்தாங்க. என்னுடைய பாட்டி குளத்துத் தண்ணிரை எடுத்து வந்து ஏதோ கொட்டையை வைத்து கடைவார்கள்!
கேட்டால் தேத்தாங்கொட்டை என்பார்கள். எப்படித் தெளிந்து இருக்கும் தெரியுமா?
இப்ப நாம காசு கொடுத்து வாங்கும் தண்ணிர், அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.ஆனால் இப்ப அந்த குளத்துத் தண்ணீரை யாரும் பயன்படுத்துகிறார்களா என்பது  சந்தேகம்தான்! 

மலையரசி அம்மன்.

அதுதான் அந்த அம்மனோட பேரு!
இதுலே என்ன விசேஷம்ன்னா, கோயில்ல அம்மனுக்குன்னு எந்த சிலையும் கிடையாது.
அம்மனை பெண்களும் போய் பார்க்கறது வழக்கம் இல்லை. ஆச்சர்யமாக இல்லை!
அம்மனனுக்கு மாலை கட்டிப் போட்டால், நாம வேண்டிக்கிறது எல்லாம் நடக்கும். இது  இந்நாள் வரை நடந்துண்டு இருக்கும் வழக்கம்.
ஆழ்வார்கள் யாரும் பெருமாள் மேல் பாசுரங்கள் பாடயுள்ளனரா என்றால் இல்லை என்றே  சொல்லவேணும்.
ஆனால் இந்த அம்மனை கவியரசு கண்ணதாசன்  தன்னுடைய பாடல்களில் பாடியுள்ளார் என்பது அதைவிட ஆச்சர்யம்.
முன்னாலே சொன்னோமே பெருமாள் கோயில் குளம்ன்னு, அந்தக் குளத்தில்
அக்கிரஹாரத்தைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் விட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் தேய்த்து, பின்னர் அங்கேயே குளித்து விட்டு வருவார்கள் அப்ப எப்படி இருந்ததோ  அப்படியே தான் இப்போதும் உள்ளது. ஒரு மாற்றமும் இல்லை, குளத்தில்!
மாற்றம், அக்கிரஹாரத்தில் தான்!
போலீஸுக்கு சொல்லித்தான், அக்கிரஹாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.!
அது மட்டுமா? அக்கிரஹாரத்தில் இருந்த மக்களையும் தான்.
அந்தப் லக்ஷ்மி நாராயணன் தான் அவர்கள் மனதில் சென்று அவர்களை இங்கு வரவழைக்க  வேண்டும்.
ஆனால் வருஷத்து இரு தடவை கோவிலில் நடக்கும் விஷேஷத்துக்கு வந்து விடுவார்கள்
அப்படித்தான் இந்த வருஷம் கோவிலில் குடமுழுக்கு நடந்து ஏழாவது வருஷ பிரதிஷ்டா  தினம் 5-6-2012 அன்று நடைபெற்றது. திருமஞ்சனம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.

ஹோமத்தில் கலந்து கொண்ட சில அன்பர்கள்


ஹோம திரவியங்கள் பிரதக்ஷிணம்
ஹோமம்

திருவெள்ளறை அர்ச்சகர்கள் வெகு சிறப்பாக நடத்தினர்.
அதிலேருந்து சில காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன!!நெடுமறம் நோக்கி கிளம்பிட்டீங்களா?