புதன், ஜனவரி 11

திருக்கோவிலூர் அனுபவம்

 திருக்கோவிலூர் அனுபவம்

அன்று மழை. இடியுடன் கூடிய மழை. ஊழி பெருநீர் என்பார்களே அப்படி ஒரு மழை.
ஆழ்வார்கள் பாடிய பாசுரத்தில் உள்ளது போல் அப்படி ஒரு மழை.
         கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
             கதுவாய்ப்பட நீர்முகந்து ஏறி எங்கும்
         குடவாய் பட நின்று மழை பொழியும்
             கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
கடலில் இருக்கும் எல்லாத் தண்ணீரையும் மேகங்கள் மொண்டு கொண்டு அப்படியே மழையாய் பெய்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு மழை பொழியும் நாள்.இருட்டோ கண்ணனைப் மையிருட்டு. எடுத்து ஒட்டிக கொள்ளலாம் போல இருட்டு. யார் முன்னர் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத இருட்டு. அந்த சமயத்தில், எங்கு ஒதுங்குவது என்று தெரியாமல், சரி இந்த இடைகழி (இடைகழி என்றால் தெரியாதவர்கள்
வீட்டில் உள்ள முன்னோர்களைக் கேட்கவும்.அதனை ரேழி என்றும் அழைப்பர்.) நமக்குப் போதும்  என்று, அந்த சிறிய இடத்தில் மழைக்காக ஒதுங்குவோம் என நினைத்து ஒதுங்கினார்.
அப்போது பார்த்து மற்றொருவரும் அருகில் வந்து, முன்னவரிடம், "நானும் ஓதுங்கலாமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கின நபரும்
"ஒருவர் உறங்கலாம் ,இருவர் நிற்கலாம். எனவே நீங்களும் உள்ளே வாருங்கள்"
என்று வந்தவருக்கு இன்முகம் தந்து அருளினார்.
மழையோ நின்றபாடில்லை.
அந்த சமயம் பார்த்து, மூன்றாமவர், அதே இடத்துக் வந்து, யாரோ இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களிடம்,
"நாமோ ஒரு ஏழை, வெளியே மழை எனவே இந்த இடத்தில் நாம் ஒதுங்கலமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கி இருந்த இருவரும், கும்மிருட்டில் ஒருவருக்கொருவர் பார்த்துக்  கொள்வதாக நினைத்துக் கொண்டு,
"ஒருவர் உறங்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்." என்றனர்.
எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். நாமளா இருந்தா என்ன பண்ணுவோம்? இங்கே ஒன்னும் இடம் கிடையாது. எங்களுக்கே இடம் கிடையாது, நீங்க வேறே ஹிம்சை பன்னாதிங்கோ வேறே எங்கேயாவது இடத்தைப் பார்த்துப் போமையா, என்போம்.மூவரும் அந்த இடைகழியில் சிறிது நேரத்தைப் போக்கினர்.
சிறிது நேரத்தில் மூவருக்கும் மூச்சு முட்டத் தொடங்கியது. ஏனெனில் நாலாவதாக ஒருவர் வைத்திருப்பதை முவரும் உணர்ந்தார்கள்.
முதலாமவர், "யாரப்பா இது, இப்படி நெருக்குவது? மூன்று பேருக்கு மேல நிற்கமுடியாத இடத்தில் நாலாவது நபர?" என்றார்.
இரண்டாமவர், "இந்த இருட்டில் யார் வந்துள்ளார் என்பதை விளக்கை
ஏற்றிப் பார்த்து விடுவோம். அது சரி விளக்குக்கு எங்கே போவது?"
முதலாம்வர்,  "விளக்கு என்பதே விளக்கத்தானே? இல்லாத ஒன்றை வைத்து நாமே ஏற்ற முடியுமா பார்ப்போம்." என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது, "ஓம் நமோ நாராயணாய " என்ற எட்டு எழுத்து மந்திரத்தில் "நம" என்ற "ந" என்றது "இல்லை", "ம" என்றதும், "இல்லை"
"இல்லை இல்லை", எல்லாம் எனதில்லை, எல்லாம் பரம்பொருள் தானே கொடுத்தது, எனவே  அவனை வைத்தே விளக்கை ஏற்றுவோம்"
என்று சிந்தித்து,
"உலகத்தேயே அகல் விளக்காய் ஏற்றி, அதில் சுழ்ந்த கடலையே நெய்யாக்கி, கதிரவனேயே  நெருப்பாக்கி (திரியாக்கி), சக்கரம் கொண்ட முதல்வனின் திருவடிக்கு சொல் மாலை சூட்டி, மனித குலத்தின் இருளை நிக்குவோம்",
என்று விளக்கில் இருந்தே விளக்கை எடுக்கிறார்
         வையம் தகளியா வார்கடலே நெய்யாக
                  வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
         சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
                  இடராழி நீங்குகவே என்று!
என்று முதல் பாசுரம் தோன்றியது.
உடனே இரண்டாமவர், முதல் விளக்கிலிருந்து விளக்கை எடுத்து, தன் பங்குக்கு
       "வாழ்வைத் தாங்கும் அன்பை அகல் ஆக்கி, இறைவனிடம் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கி
சிந்தனையையே திரியாக்கி, நாராயணனுக்கு ஞானத் தமிழில் சொன்னேன்"
என்று ,
            அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
                இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
            ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
                ஞானத் தமிழ்புரிந்த நான்
அந்த இரண்டு விளக்குகளும்  வந்திருப்பவன் யார்  என்பதை உணர்த்திவிட்டன.
மூன்றாமவர்  உடனே,
   " உலகனைத்தும் ஆளும் மகாலக்ஷ்மியைக் கண்டேன், அதுவும் ஒப்பிலாத அப்பன் திரு
மேனியில்,திருமார்பில் கண்டேன், சங்கு சக்கரங்களுடன் பொன்னாழி கண்டேன்,
             திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
                 அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
             பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                  என்னாழி வண்ணன்பால் இன்று
மூவரும் உணர்ந்து கொண்டனர் வந்திருப்பது திருமால். தங்களை உய்யக்
கொள்வதற்குதான் வந்திருக்கிறான்  என்று உணர்ந்தனர்.
ஆக இத்தனை நேரம் நாம் சொல்ல வந்தது முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார்,
பூத்தாழ்வார், பேயாழ்வார்  ஆகியோர்களைப் பற்றித்தான். இடைகழி என்ற இடம்
திருகொவிலூர் திவ்யஸ்தலம் தான்.
ஆம், திவ்யப் பிரபந்தம் பிறந்த இடம் தான் திருகோவிலூர். பிரபந்தங்களுக்கு ஆரம்பம் திருக்கோவிலூர்.
உலகளந்த பெருமான் தன் கையில் சக்கரத்தையும் சங்கையும் மாற்றிப் பிடித்துள்ளான்.
ஆம் வலக்கையில் சங்கையும், இடக்கையில் சக்கரத்தையும் பிடித்துள்ளான்.
பூங்கோவல் நாச்சியார் என்பது தாயாரின் திருநாமம். இன்றைக்கெல்லாம் தாயாரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நம்முடைய கண் தாயாருக்கு பட்டு விடும் போல அவ்வளவு அழகு போங்கள்.
முதலாழ்வார்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளைப் பாடி உள்ளார்கள்.


ஆக மூன்று ஆழ்வார்களுக்கும் இடம் கொடுத்த இடைகழி 2012 ம் ஆண்டு ஜனவரி திங்கள்  8 ம் தேதி எங்களுக்கும் இடம் கொடுத்தது என்றால் எங்கள் பாக்கியம்.
ஆம் நாங்கள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபா அன்பர்கள்
சுமார் 45 பேர், பாண்டிச்சேரி ஸ்ரீ. ஜனார்த்தனன்  தலைமையிலான சஹஸ்ரநாம சபா நடத்தும்  அகண்ட பாராயனத்தில் கலந்து கொண்டோம். அவர்கள்தான் திருக்கோவிலூர் பூங்கோவல் நாச்சியார்
சமேத தேகளிசன், (உலகளந்த திருவிகரமனுக்கு மற்றொரு பெயர்) சந்நிதியில் 12 முறை  சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும் பாக்கியம் பெற்றோம்.
அதிலிருந்து சில காட்சிகள் இந்து இடம் பெற்றுள்ளன.





திருக்கோவிலூர் திருவிக்ரமன்
திருக்கோவிலூர் சியர் ஸ்வாமிகள்
திருக்கோவிலூர் திருவிக்ரமன் கோபுரம்






மகளிர் அணி
மகளிர் அணி
ஆடவர் அணி
மகளிரணி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக