திங்கள், பிப்ரவரி 26

ராமானுஜா அநு யாத்திரை அலகாபாத் திரிவேணி சங்கமம்.


அலகாபாத் திரிவேணி சங்கமம்.









கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கம்மாகும் இடம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம். ப்ரயாக் என்றும் அழைக்கப்படுகிறது .ஶ்ரீமஹாலக்‌ஷ்மியின் மூன்று பின்னல்கள் தான் திரிவேணி சங்கமம் ஆகும். இதில் கங்கை, யமுனை ஆறுகள் கலப்பது நன்கு தெரியும். ஸரஸ்வதி நதி கலப்பது தெரியாது, அதாவது உள்ளுக்குள் கலப்பாக ஐதீகம். எனவே இவ்வாறு கலக்கும் இடத்தில ஸ்நானம் செய்வது மிக நல்லது என்பதால், எல்லோரும் ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு மூன்று நதிகள் கங்கமம் ஆகும் இடத்திற்கு சென்று படகில் இருந்து இறங்கி குளிப்பார்கள். இது ஒரு ஆனந்த அனுபவம்.
காசியில் இருந்து புறப்பட்டு விடியற்காலை அலகாபாத் வந்து சேர்ந்தோம். நேராக கங்கைக் கரைக்கே சென்று எல்லோரும் குழுக்களாக படகை ஏற்பாடு செய்து கொண்டு, மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்துக்குச் சென்று, முழங்கால் அளவு மட்டுமே இருந்த சங்கமித்த இடத்தில் நீராடினோம்.
போகின்ற வழியில் படகை இலக்காக கொண்டு நீர் காக்கைகள் அதிக அளவில் பறந்து சுற்றி சுற்றி வருகின்றன. அவைகளுக்கு யாத்திரிகரகள் காராஷேவ் வாங்கி தூவுகின்றனர். அவைகள் பறப்பது பார்க்க அழகாக இருக்கிறது.

அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தை தவிர அதன் அருகியே உள்ளது அக்ஷ்ய வடம் என்று சொல்லப்படும் ஆலமரம். இதன் இலையில் தான் ப்ரளயத்தின் போது பால முகுந்தனாக பகவான் சயனித்தாராம். இது ஒரு அழியாத ஆலமரம்.
அடுத்து முக்கியமான சன்னிதி வேணி மாதவன் சன்னிதி.
காட்டுக்கு புறப்பட்ட ராமன், ஸீதை, லக்ஷ்மணன் ஆகியோர் குகனின் இருப்பிடமான சிருங்கிபேரபுரம் வந்தனர். குகனின் ஓடத்தில் ஏறி கங்கைக் கரையைக் கடந்து இன்று பிரயாகை இருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்குள்ள பரத்வாஜ் ஆஸ்ரமத்துக்கு வந்தனர். அவருடைய வழிகாட்டுதல் பேரில் சித்திரக்கூடத்தை நோக்கி புறப்பட்டனராம்.
அந்த பரத்வாஜ் ஆஸ்ரமம் கங்கைக் கரையில் உள்ளது. அதனையும்  தரிசித்துக்கொண்டோம்.
அலகாபாத்தில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய. நேரம் இல்லாதது ஒரு காரணம். ஆகாரத்தை முடித்துக்கொண்டு அடுத்த திவ்ய தேசத்தை நோக்கி பயணப்பட்டோம்.

செவ்வாய், பிப்ரவரி 20

ராமானுஜா அனு யாத்திரை வாரணாசி இரண்டாம் பகுதி.



வாரணாசி இரண்டாம் பகுதி.
பிந்து மாதவன் சன்னதியை நோக்கி பயணமானோம் என்று நிறுத்தியிருந்தேன்.


நாங்கள் செல்லும் போது உபன்யாசம் முடியும் தருவாயில் இருந்தது.
சிறிது நேரத்தில் காசி ஷேத்ரம் பற்றிய அவரது உரை முடிந்தது. நாங்கள் உடனே பிந்து மாதவன் சன்னதியை தரிசித்தோம். அருகிலேயே கால பைரவர் சன்னதியும் இருப்பதாகச் சொல்லவே, அதனை நோக்கி சந்துகளில் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் லஸ்ஸி என்று சொல்லப்படும் சர்க்கரை கலந்த தயிர், நிறைய கிடைக்கிறது, அதனை ருசிபாரத்தோம். கிராம தேவதை என்று நம்மூரில சொலவோமே அது போல, அங்கு கால பைரவர். அவரை தரிசித்துக்கொண்டு மதிய ஆகாரம் கிடைக்கும் இடமான ஸ்வாமிநாராயண் மந்திர் நோக்கி மீண்டும் சந்துகளில் பயணித்தோம்.
ஆகாரத்தை முடித்துக்கொண்டு, நமக்காகவே காத்துக்கொண்டு இருக்கும் வாகனம், ஆட்டோவில் தங்கும் அறையை நோக்கி பயணப்பட்டோம்.
கங்கைக்கரை ஓரங்களில் மாலை நேரத்தில் ஹாரத்தி விஷேஷம். நம்மைப் போன்றவர்களுக்கு ஹாரத்தி பார்ப்பது, அதனைப் பார்க்க இடம் பிடிப்பது போன்றவைகள் முக்கியமானது.





இதற்காகவே மாலை 4 மணிக்கே கிளம்பி, பேரம் பேசி, ஒரு படகை வாடகைக்கு அமரத்திக்கொண்டோம். கங்கையில் உள்ள அத்தனை ghats கட்டங்களையும காணபித்துவிட்டு ஹாரத்தி நடக்கும் இடத்தில நிறுத்த வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்த பாஷை, படகோட்டிக்குத் தெரிந்த பாஷையில் பேசி, கங்கையில் “ஹைலேசா” பாடினோம்.
படகோட்டி ஒரு முனையில் இருந்து கடைசி முனை வரை இருக்கக்கூடியெல்லா படித்துறைகள் மற்றும் அவைகளை கட்டியவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லிக்கொண்டே லாகவமாக படகினை ஓட்டினார். நேரம் போனதே தெரியவில்லை.
அது ஒரு சுகமான அனுபவம் தான்!!!
கடைசியா அந்த தருணமும் வந்தது, ஆம், ஹாரத்தி!!!!
கங்கை செல்லும் பாதையில் உள்ள எல்லா கரைகளிலும் மாலை நேரத்தில் ஹாரத்தி எடுத்து, கங்கைக்கு மரியாதை செய்கிறார்கள். அதோடு கங்கையையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறார்கள். பாடலோடு ஹாரத்தி, பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. எள்ளு போட்டால் எள்ளு விழாது எனபாரகளே அது போல அத்தனை கூட்டம். கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடக்கிறது. சிரத்தையுடன் நடக்கிறது. பார்க்க வேண்டிய ஒரு வைபவம். 
யாரும் தவறவிடாதீரகள்!!!

இராமானுசா அனு யாத்திரை; வாரணாசி. காசி ஷேத்ரம்













 வாரணாசி. காசி ஷேத்ரம் 
வாரணா மற்றும் அசி என்ற இரண்டு நதிகள் சங்கமிப்பதால் இந்த இடத்துக்கு வாரணாசி என்று பெயர் பெற்றது.
முக்தி தரும் ஷேத்ரங்கள் இந்தியாவில் ஏழாம். அதில் வாரணாசியும் ஒன்று.
சரீரத்தை இந்த ஊரில் நீக்க நேரநதால் நிச்சயம் முக்தி தானாம். காசி, காசி என்று நினைத்தாலே முக்தி கிடைக்குமாம். பனாரஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது.
நிறைய பேர் இராமேஸ்வரம் கடலில் குளித்துவிட்டு அங்கிருந்த மண்ணை எடுத்து வந்த கங்கையில் கரைக்கவேண்டும் என்று பயணிக்கிறாறகள்.
புராணம் என்ன சொல்லுகிறது?
சிவபெருமான் தனது தந்தையின் ஐந்து சிரஸ்களில் ஒன்றை  கிள்ளிவிடுகிறார். அதனால ப்ரமஹத்தி சாபம் பெற்று, கையில் கபாலம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. அதனை எப்படி நீக்குவது என்று தெரியாமல் 12 ஆண்டுகள் பத்ரி, குருஷேத்திரம் என்று பல இடங்களில் அலைகிறார். கடைசியாக பாகீரதி என்கிற இந்த வாரணாசி ஷேத்ரத்தை அடைய, கபாலம் உடைந்து ப்ரமஹத்தி தோஷம் நீங்குகிறது. இவ்விடம் “கபால மோக்‌ஷ தீர்த்தம்” எனப் பெயர்பெறுகிறது. சிவபெருமான் ஸீமஹாவிஷ்ணுவிடம் தனக்கு நித்ய வாஸஸ்த்தலமாக இந்த இடம் இருக்க அனுமதி பெற்று காசி விஸ்வநாதராக இங்கேயே வாசம் செய்கீறார். அந்த சமயத்தில் விஷ்ணு கண்ணில் இருந்து ஆனந்தக்கண்ணீர் ஏற்பட்டு, ஒருதுளி கீழே விழுந்தது. அந்த இடம் பிந்து ஸரஸ் என்று பிந்து மாதவன்  என்று அழைக்கப் படுகிறார்.
இந்த ஊரில்  மரணம் அடைந்தவர்களை தகனம் செய்வது விஷேஷம். இறந்த உடல் மீது நாம் பட்டுவிட்டால் தீட்டு கிடையாது  என்பார்கள்.
கங்கை : கங்கையில் ஒரு போட்டில் ஏறிக்கொண்டு பயணம் செய்வது சுகமான அனுபவம்.  
கங்கை படித்துறைகள்
50 முதல் 60 படித்துறைகளை பார்த்துக்கொண்டே பயணம்  செய்வது தவிர்க்ககூடாதது.
இதில் முக்கியமானது, பஞ்ச கங்கா காட், மணிகர்ணிகா காட், தஸ் அஸ்வமேதா காட், வருணாஸங்கம் காட் போன்றவைகள்.
வருணா நதி கங்கையுடன் கலக்கும் வருணா சங்கமம் காட்டின் படித்துறையில் ஆதிகேசவன் கோயில் உள்ளது. 
யமுனா,ஸரஸ்வதி, கிரணா, மற்றும் தூதபாபா நதிகள் கங்கையோடு கலக்கும் படித்துறையின் மேல் பிந்து மாதவன் சன்னிதி உள்ளது.
மணிகர்ணிகா காட்டின் மேல் மணிகர்ணிகா குண்டம்  உள்ளது. இந்த குண்டத்திண் தண்ணீர் எட்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியேறுகிறது.அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியா நீர் வந்து நிரம்புகிறது.
ப்ரம்மா பத்து அஸ்வமேதயாகம் செய்த இடம் தஸ் அஸ்வமேத காட்.
அஸி நதி கங்கையோடு கலக்கும் இடம் அஸி ஸங்கம் காட்.
அடுத்த தடவை காசி க்கு வரும் போது கங்கையில் பயணம் செய்ய மறந்து விடாதீர்கள்.
காசி விஸ்வநாதர் ஆலயம்.
நிறைய ஆலயங்கள் உள்ள காசியில், முக்கியமானது காசி விஸ்வநாதர் ஆலயம்.  சந்து, சந்து, அவ்வளவு சந்துக்குள் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
அது மட்டுமா, அவ்வளவு போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் உள்ளே அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. நாங்க கோண்டுபோன, அதாங்க எங்க கவசகுண்டலம், சாப்பிடும் தட்டு இருந்த பைய கூட உள்ளே கொண்டு போக விடாம, நாங்க தவித்த கதை தனிக்கதை. பின்னால என்னாச்சு நீங்க கேட்பது காதில் விழறது, பதில் அப்புறம்!!!
என்னமோ பெரிய பீடத்தில் காசி விஸ்வநாதர் இருப்பார்ன்னு பாரத்துண்டு போகாதீங்க!! கீழேயே தான் இருப்பார். பார்க்க மறந்துவிடாதீரகள்.
எந்த கேட் வழியா உள்ளே நுழையறோம் அப்படிங்கிறதப் பொறுத்து, நாம நடக்கற தூரம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.
எத்தனை கடைகள!!
சுற்றி மசூதி. அதற்குள்ள யாரும் நுழைய முடியாத மாதிரி பலத்த கம்பிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அங்கங்க இருக்கும் பாதுகாப்பு வளையத்தைக் தாண்டினால் குறுகிய வாசல் வழியா காசி விஸ்வநாதர் சன்னிதி. அவரவர்கள் கொண்டுவரும் பால அவர்களே அபிஷேகம் செய்து கொள்ளலாம். தரையிலேயே காசி விஸ்வநாதர். எங்கேயாவது பார்த்துக்கொண்டு வந்தால் விஸ்வநாதரை பார்க்க நேரம் கிடைக்காது. அதனால நமது மனம், அவரையே சிந்தித்துக்கொண்டு இருக்கவேண்டும்.
பக்தர்களின் பால் மற்றும் நீர் ஆகியவற்றை அபிஷேகம் ஏற்றுக்கொண்டு காட்சியளிக்கிறார்.
கூட்டம் அலைமோதுகிறது. உள்ளே உள்ள சன்னிதிகளை தரிசித்துக்கொண்டு மற்றொரு வாசல் வழியே வெளியே வந்தால் சிறிது தொலைவில் அன்னபூர்ணா கையில் கரண்டியுடன் உலகுக்கு அன்னம் இடும் கோலத்தில் அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். அவரையும் தரிசித்துக்கொண்டோம்.
 அந்த சந்தின் வழியாக சிறிது தொலைவில் நகரத்தார் கட்டியுள்ள காசி விசாலாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அதையும் தரிசனம் செய்தோம்.
முன்னறே சொன்னேனே எங்க கவசகுண்டலம எல்லாம், அதாங்க சாப்பிடும் தட்டு அடங்கிய பையை செக்யூரிடி எடுத்து வைத்துக்கொண்டுவிட்டாரகள் என்று, அதனை திரும்பப் பெற, மீண்டும் கேட்டுக்கு வந்து எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் பேசி உள்ளே சென்றோம்.
இதற்கு நடுவில எங்களோடு வந்தவர்களை, ஸ்வாமிகள் உபன்யாசம் செய்யக்கூடிய பிந்துமாதவன் சன்னதிக்கு செல்லும்படி பணித்தோம். அவர்களுக்கு வழிய காணபித்துவிட்டு, நானும் என் மனைவியும் மட்டும் தட்டு அடங்கிய பையை பெற்றுக்கொண்டு மீண்டும் கங்கைக்கரைக்கு வந்தோம். கங்கைக் கரையில் இருந்து பிந்தமாதவன் சன்னதிக்கு படகில் செல்ல விசாரித்தோம். நாங்க இரண்டு பேர் என்பதால் அதிகமான தொகையை (எங்களுக்கு அதிகமா தோன்றியது) படகு ஓட்டுனர் கேட்டார். அப்பத்தான் பர்ஸ பார்த்தேன். அவ்வளவு தொகை இல்லை. விஷயத்தை எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் பொளந்து தள்ளினோம்.
புரிந்துகொண்டு சிரித்தார். சின்ன பையன் தான். பிரகாஷ் என்று பெயராம், பின்னால போட்டில் போகும் போது தெரிந்து கொண்டேன், “ஏறுங்கள்” என்று கையால் சைகை செய்தார்.
அவருக்கு தகப்பனார் கிடையாது, தாயார் மட்டும் தான். அவருக்கு நான்கு தங்கைகள். படிப்பு அதிகம் இல்லை. இவர் சம்பாதித்துத் தான் வாழ்க்கை நடக்கிறது. வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தாயாரிடம் கொடுத்து விடுவாராம். அதை வைத்து தான் குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இதெல்லாம் பிரகாஷ் சொல்ல கேட்டுக்கொண்டேன். இது மட்டுமா?
வாழ்க்கை என்ன சார், இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால்!!
எத்தனை பணம் இருந்தாலும் போகும் போது எடுத்துண்டு போக முடியுமா? ஆறடி நிலம் தானே சொந்தம். அப்படியெல்லாம் தத்துவம் பேசிக்கொண்டே படகை ஓட்ட ஆரம்பித்தார் பிரகாஷ்.
அசந்துவிட்டோம்!!!
இப்படியெல்லாம் கூட ஒரு சாதாரணன் பேச முடியுமா என்று, பிரமித்துக்கொண்டு இருக்கும் போது, “வந்துவிட்டது சார் உங்கள் பிந்துமாதவன சன்னிதி” என்றார்.
கரையில் இருந்து சுமாராக 50 படிகள் உயரத்தில் இருந்தது பிந்து மாதவன் சன்னிதி, யாராவது நமக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடம் பணம் வாங்கி நண்பர் பிரகாஷுக்கு கொடுக்கலாம் என்று பார்த்தேன்.
ஹூஹூம், ஒருத்தரையும் காணவில்லை. 
“என்ன சார் பார்க்கிறீர்கள்” பிரகாஷ்.
“யாராவது தெரிந்தவர்கள் இருந்தால், அவர்களிடம் பணம் வாங்கி நீங்கள் கேட்ட பணத்தை கொடுக்கலாம் என்று பார்த்தேன்” என்றேன் பிரகாஷிடம்.
“யார் சார் உங்களிடம் பணம் கேட்டது, இருக்கின்ற பணத்தை கொடுங்கள், அது போதும்” என்றான்.
எங்ஙளவு பெருந்தன்மை!!!
கங்கையின் ஓட்டத்துக்கு எதிராக படகினை வலித்து ஓட்டுவது எவ்வளவு சிரமம். இருந்தும் கூட, இருக்கும் பணத்தை கொடுங்கள் என்று சொல்வது என்னே பெருந்தனமை!!!
பிரகாஷை வாழத்திவிட்டு, 50 படிகளில் ஏறி, பிந்துமாதவன் சன்னதியை நோக்கி சென்றோம். 
அங்கு ஸ்வாமிகள் உபனயாசம் செய்து கொண்டு இருந்தார்.
பிறகு?
பார்ப்போம் அடுத்த பக்தியில்!!!!!


செவ்வாய், பிப்ரவரி 13

புத்த கயா!!!


போதிமரத்தின் அடியில்










புத்த கயா!!!
இந்தியாவில் புத்த சமயம் ஸ்தாபிக்கப்பட்ட இடம். புத்தர் ஞானம் பெற்ற இடம். கயாவில் இருந்து ஆட்டோவில் செல்லக்கூடிய தொலைவில் உள்ளது.
எங்கள் பஸ் எல்லாம் கயாவில் நிறுத்த இடம் கிடைக்காது என்பதால் புத்த கயாவில் எல்லோரும் தங்கினோம்.
புத்த கயாவில் புத்தருக்காக பல நாடுகள், புத்த மதம் பின்பற்றக்கூடிய நாடுகள் கலாச்சாரத்தை பரப்ப கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
புத்தர் எங்கு ஞானம் பெற்றாறோ அந்த போதி மரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு தடவை பார்க்கப்பட வேண்டிய இடம்.
எங்களுக்கும் கயாவில் ஸ்ராரத்தம் போன்ற காரியங்கள் எதுவும் இல்லாததால், புத்த கயாவை நன்கு சுற்றிப்பாரத்தோம். அதன் பிறகு கயா சென்று அங்குள்ளவைகளை பார்த்தோம்.
அதைப்பற்றி முன்னறே சொல்லிவிட்டேன்.
கயாவை விட்டு அடுத்த ஷேத்ரம் நோக்கி எங்கள் அடுத்த பயணம் தொடங்கியது.
அடுத்த ஷேத்ரம் மிகவும் பிரசித்தி பெற்ற இடம், இந்தியர்களின் நாடித்துடிப்பான இடம்.
பார்ப்போம்!!!!

கயா, புண்ணிய பூமி.


கயா, புண்ணிய பூமி. 
மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். அதிலும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது  வடஇந்தியாவில் உள்ள கயா ஷேத்ரத்துக்கு சென்று  தாய், தந்தைக்கு ச்ரார்த்தம் செய்தால் புண்ணியம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றனவாம்.
இதுக்கு கதை உண்டாம்.
என்ன கதை?
கயன் என்னும் அசுரன், 10 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டவன், எந்த பிரதிபலனையும் எதிரபார்க்காமல் தொடர்ந்து தவம் புரிந்து வந்தான். இதனை மெச்சிய திருமால், அவன் உடல் அனைத்து புண்ணிய நதிகளையும் விட புனிதமானதாக இருக்கும் என்று ஆசிர்வதித்தார். ஆனால் அவன் தவத்தை நிறுத்துவதாக இல்லை. அதனால உலகமே நடுங்கிற்று. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, ப்ரம்மா கயனிடம் சென்று, தான் யாகம் செய்வதற்கு கயனின் புனிதமான உடலை வேண்டினார்.  உடன்பட்ட கயன் தூங்கும்போது ப்ரம்மா யாகத்தைத் துவங்கினார். யாகம் முடிவடையும் தருவாயில் கயன் எழுந்திருக்க முற்பட, தேவர்கள் தர்மவதி சிலையை அவன் மேல வைத்து அழுத்தினர். அவன் உடல் நடுக்கம் நிற்காததால், விஷ்ணு கதையை கையில் ஏந்திக்கொண்டு, கதாதரன் பெருமாள் வடிவில் தன் ஒரு திருவடியால் அவன் மேல் நிற்க நடுக்கம் அடங்கியது. 
அவன் உடல் கிடக்கும் 10 சதுர மைல் பரப்பு இன்று கயா ஷேத்ரம் என அழைக்கப்படுகிறது. 
தர்மவதி சிலை வரையப்பட்ட விஷ்ணுவின் ஒரு திருவடியைத் தான் நம் இல்லங்களில் பிண்ட தானம் செய்ய விஷ்ணுபாதமா பயன் படுத்தறோம்.
கயா ஷேத்ர மகிமையே இதுதான்.
கயாவில் பல்குனி நதி, விஷ்ணுபாதம், அக்‌ஷ்ய வடம் ஆகியவை முக்கியமானவை. நெல்லிக்கனி அளவு உள்ள பிண்டம், கயாசிரஸ் என்ற இடத்தில தானமா கொடுப்பதால், தகப்பனார், தாயார், மனைவி, சகோதரி, பெண், அத்தைகள், தாயின் சகோதரிகள் ஆகிய இந்த ஏழு குடும்பங்களின் 101 பேர்களை நல்ல கதி அடையச் செய்யுமாம்.
கயா ஷேத்ரம் பல விதங்களில் முக்கியமானது.
தந்தை, தாய், உறவினர், வம்சத்தில் வந்தவர்கள் நற்கதி அடைவாரகளாம்.
பலவித நரகங்களை அடைந்தவர்கள், பறவை, புழு, கிருமி, மரம் ஆகிய பிறவிகள் அடைந்தவர்கள், மனிதப்பிறவிய அடைய காத்திருப்பவர்கள் நம் வம்ஸத்தில் ஸ்ராரத்தம் பிண்டம் ஆகியவற்றை பெறாதவர்கள், இவற்றைச் செய்ய உறவினறே இல்லாதவரகள், மேலும் இவர்கள் இருந்தும் கருமங்கள் செய்யப்படாதவரகள் ஆகியோருக்கு இங்கு பிண்டம் கொடுப்பதால் நற்கதி அடைவார்களாம்.
உறவினர்களில் தாயாருக்கு அதிக முக்கியத்துவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மகன் பிறக்கவில்லை என்று தன் தாய் பட்ட கஷ்டத்தை நினைத்து, கர்ப்பத்தை தரித்ததால் தாய்க்கு உண்டான கஷ்டங்களை நினைத்து, கர்ப்பம் வளர்ச்சியடையும் ஒவ்வொரு மாதத்திலும் உண்டாகும் கஷ்டத்தை நினைத்து, கர்ப்ப காலத்தில் கை கால்களால உதைத்த போது ஏற்பட்ட கஷ்டத்தை நினைத்து, நிறை மாதத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை நினைத்து, குழந்தை பிறந்தபிறகு தாய்ப்பால் கொடுக்க கஷ்டத்தை நினைத்து,
இப்படி தாய்க்கென மற்றவர்களை விட அதிகமான பிண்டங்கள், ஒவ்வொன்றுக்கும் அர்த்ததை  சொல்லி புரோகிதர், வைக்கச் சொல்லும் போது எவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவனுக்கும கண்ணில் நீர் வராமல் இருக்காது.
பல்குனி நதியில் ஆறு மாதம் நீர் வராது.  நீர் வராத காலங்களில் ஊற்று நீர் உண்டாக்கி, அதில் பிண்டத்தை கரைப்பார்கள். 
பல்குனி நதிக்கரையில் உள்ள முக்கியமான கோயில் விஷ்ணு பாதம். இங்கு விஷ்ணுவின் திருவடி உள்ளது. இக்கோயிலின் வெளியே கயா மண்டபத்தில் ஸ்ராரத்தம் செய்து, அக்ஷ்ய வடம் என்று சொல்லக்கூடிய ஆலமரத்தின் அடியில் பிண்ட தானம் செய்வார்கள்.
ஆக இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஷேதரத்தில் எங்களுடன் வந்த நிறையபேர் ஸ்ராரத்தம் செய்து தங்கள் முன்னோர்களை கரை சேர்ந்தார்கள். அதற்கு உதவிய ஸ்வாமிகளை என்றும் மறுக்கமுடியாது.
நான் முன்னறே ஒரு தடவை செய்து விட்டதால், இந்த முறை ஸ்ராரத்தம் செய்யவில்லை.
நாங்கள் பல்குனி நதியை நோக்கிச் சென்றோம், முன்னறே சொன்னது போல நீர் குறைவாகத்தான் இருந்தது. ப்ரோக்‌ஷித்து கொண்டோம். கதாதரப் பெருமாளை சேமித்துக் கொண்டோம். 
கதாதர் கோயில்
விஷ்ணுபாதம், அக்‌ஷ்யவட ஆலமரத்தை வலம் வந்தோம். 
ஸ்வாமிஜி ஸ்ராரத்தம் செய்தவர்கள், செய்யாதவர்கள் என இரு பிரிவினருக்கும் ஏற்ப ஆகாரம் தயார் செயதிருந்தார்கள். 
முன்னதாக நாங்கள் தங்கி இருந்தது புத்த கயா, கயாவில் இருந்து ஆட்டோவில் செல்லும் தொலைவில் உள்ளது.
புத்த கயா, என்ன விஷேஷம்???
பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!

புதன், பிப்ரவரி 7

இராமானுஜா அனு யாத்திரை: ஆறாம் பகுதி:










இராமானுஜா அனு யாத்திரை: ஆறாம் பகுதி: 
நேரா கோயிலை நோக்கி வண்டிய நகர்த்த சொன்னேன் சென்ற பகுதியில.
ஏன் சார் மீண்டும் கோயில்?
ஆமாம், முன்னாலேயே சொல்லியிருந்தேனே, கொடியேற்றம் முக்கியமானது
ஜகன்னாதர் கோயில் கொடியேற்றம் உலகப்பிரசித்தி பெற்றது  அதைப்பற்றி முன்னறே எழுதியுள்ளேன்.
அவ்வளவு உயரம் உள்ள கோபுரத்தில் எவ்வாறு ஏறுவார்கள் என்று ஆர்வம்.
மணி ஆகிக்கொண்டே இருந்தது. டிரைவர் “போய் விடலாம் சார்” என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார்.
கோயிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரை நிறுத்தி இறக்கிவிட்டார்.
எதிரே வரும் நபரை விஜாரித்ததில், “முன்னறே கொடியேற்றம் முடிந்துவிட்டது” என்றாறே பாக்கணும். யார் முகத்திலும் ஈயாடவில்லை.

இதுக்கு நடுவில் ஸ்வாமிகள் கோயில் முகப்பில் இருந்து பக்தர்களுடன் வீதிப் பிரதிக்‌ஷிணம் போய்க் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு, நாங்களும் அதில் கலந்துகொண்டு முடிவில் வீதியின் முடிவில் உள்ள குண்டிசா மந்திரை அடைந்தோம். பெரிய மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவில் ஸ்வாமிகளின் உபன்யாசம் நடந்தது.
இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தோம். மறுநாள் விடியற்காலை ஊரைவிட்டு கிளம்பி, இடையில் சாகஷி கோபால் சன்னிதியை தரிசித்துவிட்டு, அன்று இரவோ அல்லது மறுநாள் காலை எங்களின் அடுத்த திவ்ய தேசமான கயா அடைவதாக ப்ளான்.
எல்லாம் சரியாக இருக்க விடியற்காலை எங்கள் சாமான்களை எடுத்துக்கொண்டு பஸ்ஸில் பயணமானோம்.
சாக்ஷி கோபால் சந்நிதி

அருகிலேயே இருந்தது சாகஷி கோபால் சன்னிதி.
பூரிக்கு வருபவர்கள் சாக்‌ஷி கோபால் சன்னதிக்கு வந்து அட்டடண்ஸ் கொடுத்துட்டு போகணுமாம், இல்லைன்னா யாத்திரை பூரத்தியாகாதாம்.
எதுக்கு வம்புன்னு எல்லாரும் ஒரு விஸிட் பண்ணிடுவாங்களாம்.
சின்ன கோயில் தான். வரிசையில் நின்று பெருமாளை சேவித்தோம்.
1400 பேரும் சேவித்து அங்கேயே ஸ்வாமிகள் ஏற்பாடு செய்து இருந்த (அதுவும்  தான் இந்த டூர்ல விஷேஷம்) காலை உணவை முடித்துக்கொண்டோம்.
பஸ்ஸில் ஏறி உட்காந்தோம், அடுத்த. திவ்யதேசம் கயா.
கிட்டத்தட்ட 18மணி நேரப் பயணம்.
கயா, ஆசையை துற என்று உபதேசம் செய்த புத்தரின் போதி மரம், மற்றும் உபதேசம் செயத இடம் மற்றும் இந்துக்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் முக்கியமான இடம் ஆகும்.
எல்லா காலங்களிலும் முக்கியமான இடம்.
எங்கள் வண்டி பல மணி நேரத்துக்கு பிறகு, ஒருவழியா புத்த கயா வந்து சேர்ந்தது  கயாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்த கயா. எங்கள் எல்லா பஸ்களும் கயாவில் நிறுத்தமுடியாது என்பதால் புத்த கயாவை நோக்கி எங்கள் பயணம் முடிந்தது.
கயாவில் என்ன விஷேஷம்?